மானிட ஜாதியின் சுதந்திரம்
வெ. சாமிநாத சர்மா
1. மானிட ஜாதியின் சுதந்திரம்
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. அணிந்துரை
4. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
5. பதிப்புரை
6. நுழையுமுன்…
7. இவன் யார்?
8. இங்கர்ஸால் மற்ற இடங்களில் என்ன சொல்லி யிருக்கிறான்?
2. மனதுக்கும் சுதந்திரத்திற்கும் உள்ள சம்பந்தம்
3. ஸ்திரீ சுதந்திரம்
4. குழந்தைகளின் சுதந்திரம்
5. முடிவுரை
மானிட ஜாதியின் சுதந்திரம்
வெ. சாமிநாத சர்மா
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : மானிட ஜாதியின் சுதந்திரம்
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 12
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல் பதிப்பு : 2005
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 16 + 320 = 336
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 315/-
படிகள் : 500
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ், ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
அணிந்துரை
எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.
“ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.”
அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.”
இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.
ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன.
இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.
83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.
காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033.
பெ.சு. மணி
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய ‘தேச பக்தன்’ நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் ‘நவசக்தி’ கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் ‘சுயராஜ்யா’ நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான ‘பாரதி’யில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது ‘குமரி மலர்’ மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க., மகாகவி பாரதியார், பரலிசு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் ‘அவள் பிரிவு’ என்று நூலாக்கம் பெற்றது.
இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் “ஜோதி” மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ‘ஜோதி’. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ‘ஜோதி’யில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் ‘விபரீத ஆசை’ முதலான கதைகள் ‘ஜோதி’யில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ‘ஜோதி’யில் ‘வருணன்’, ‘சரித்திரக்காரன்’, ‘மௌத்கல்யன்’, ‘தேவதேவன்’, ‘வ.பார்த்த சாரதி’ முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ‘ஜோதி’ அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் ‘பிளாட்டோவின் அரசியல்’ என்ற உலகம் போற்றும் நூல்.
சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை?’ முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.
‘காரல் மார்க்ஸ்’ வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய ‘லெட்சுமிகாந்தன்’, ‘உத்தியோகம்’, ‘பாணபுரத்து வீரன்’, ‘அபிமன்யு’ ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ‘ஞானாலயா’ பி. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை - 622 002.
டோரதி கிருஷ்ணமூர்த்தி
பதிப்புரை
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!’ என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது.
தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும் வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை இனிப்புப் பொங்கலாகத் தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கியங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்ததாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
அடிமை உணர்வையும், அக்கறையற்றப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம்.
பதிப்பாளர்
நுழையுமுன்…
மானிட ஜாதியின் சுதந்திரம்
இங்கர்சால் பகுத்தறிவுச் செம்மல், அமெரிக்கா ஈன்றெடுத்த அறிஞன் நூலின் மொழிபெயர்ப்பே மானிட ஜாதியின் சுதந்திரம். இவன் ஒரு சிந்தனையாளன். எதனையும் அஞ்சாமல் வெளியிலே சொல்லும் ஆற்றல் உடைய அறிஞன். தான் உழைத்துச் சேர்த்த செல்வத்தைத் துன்பப்பட்ட மக்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தவன்.
அறிவுப் பெருக்கத்தின் விளைவால் உள்ளத்தில் பட்டதை உலகிற்கு உரைத்த அறிஞர்கள் வரிசையில் வைத்து எண்ணப் படத்தக்கவன். உயிரைத் துரும்பென மதித்தவன். எதிர்ப்பு, இரண்டகம், மரணம் இவற்றைப் பொருட்படுத்தாமல் வாழ்ந்து மறைந்தவன். எதை உண்மை என்று நம்பினார்களோ அதற்காகத் தலைநிமிர்ந்து நின்ற பெறுமை உடையவர்களே மாமனிதர்கள். (பக். 19)
எந்த ஒரு வீட்டில் பயனதரும் நூல்கள் அடங்கிய நூலகம் உள்ளதோ அங்கு அறிவுச் செல்வம் குடி கொண்டிருக்கிறது. பழங்காலத் தெப்பத்திற்கும், இக்காலப் போர்க் கப்பலுக்கும், பழங்காலத் தடிக்கும், இன்றைய தகரி(பீரங்கி)களுக்கும் உள்ள அறிவின் முன்னேற்றத்தை இந்நூலில் அறியலாம்.
அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அடிமை முறையை அடியோடு ஒழித்தார். இவர் உலக வரலாற்றில் தனக்குக் கிடைத்த ஆளுமையை வேறு எதற்கும் பயன்படுத்தாது மக்களின் வாழ்வுயர பயன்படுத்தியவர் எனும் குறிப்பும் காணப்படுகிறது.
உலகமெலாம் கட்டியாளும் அரசனாக இருப்பதைக் காட்டி லும் ஓர் ஆண்மகனாக, ஒரு பெண்ணின் அன்பிற்குரியவனாக ஒருவன் இருந்தால் அவனே மிக உயர்ந்த மாந்தன். பெண்மை யின்அன்பைப் பெற்ற பேராளன். பெண்மையின் பெருமை பேசப்படும் நூல்.
குழந்தைகளின் அருமை பேசப்படும் நூல். (பக். 68)
அறிஞர்கள் உருவாக வேண்டுமானல் குளிர்காலமும் தேவை, கோடைக்காலமும் தேவை. எந்த நாட்டில் மாந்தனுக்குப் போர்வை தேவையில்லாமல் இருக்கிறதோ, எங்கு முகில்கள் கதிரவனை மறைத்துக் கொண்டிருக்கிறதோ அங்கே தொழில் புரட்சி தோன்றும். பண்படுத்தப்பட்ட மண்ணில்தான் சிறந்த விளைச்சலைக் காண முடியும். அப்படிப் பட்ட நாட்டில்தான் மிகச்சிறந்த அறிஞர்களை உருவாக்க முடியும்.
சுதந்திரத்தின் தேவைகள் யாவை?
சீனப் பெருநிலத்தில் குடும்பப் பற்றும், மரபுப் பற்றும் மிகுந் திருந்ததே தவிர நாட்டுப்பற்று குறைந்திருந்தது. சீனர்கள் மணற் மூட்டை போன்றவர்கள். நமது மக்கள் குடும்பத்திற்கும் மரபிற்கும் பற்று செலுத்தினார்களே தவிர ஏன் தேசத்திற்கு பற்று காட்டவில்லை? என்று வருந்தியவன் சீன குடியரசுத் தந்தை சன்யாட்சென்.
உலக மக்களோடு சீனாவை ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகுந்த மக்கள் தொகையோடு இருக்கிறோம். பழம்பெருமை வாய்ந்த கலையறிவோடு இருக்கிறோம். பலகோடி மக்கள் வாழ்கிறோம். தேசிய உணர்ச்சி இல்லையே ஏன்? அந்த தேசிய உணர்ச்சியை வலுப்பெறச் செய்ய வேண்டாமா?” என்ற வினாவை எழுப்பி சீனத்தில் தேசிய உணர்ச்சியைக் கட்டி அமைத்தவன்.
ஒரு நாடு தலைநிமிர்ந்து வாழவேண்டுமானால் அதற்குப் பல துன்பங்கள் வரவேண்டும். எந்த ஒரு நாடு தனக்கு வெளிநாட்டுத் தீங்குகள் இல்லை என்று கருதிக்கொண்டிருக்கிறதோ அது சிதறிப் போவது திண்ணம். ஒரு நாட்டிற்குத் துன்பங்கள் ஏற்பட்டால் அந்தத் துன்பங்களைக் கண்டறிந்து மக்களை ஒன்றுதிரட்டி வீரப்போர் புரிவதே தம் வாழ்விற்கு வழியாகும்.
சீன மக்களாகிய நாம் சீன மக்களின் இன உணர்ச்சியை தேசிய உணர்ச்சியாக வளர்த்தெடுத்துக் கொண்டோமானால், உலக அரங்கில் நிமிர்ந்து நடைபோடுவோம். பிற நாட்டு அறிஞர்கள் மக்களாட்சியைப் பற்றி பேசுகிறார்கள்; நூல்களும் எழுது கிறார்கள். மக்களாட்சி அங்கே மலர்ந்துவிட்டது. இங்கே அந்த மலர்ச்சிக்கு வழியில்லையே ஏன்?
சுதந்திர முழக்கம்
ஒருவனுக்குத் தலைவணங்கி முழந்தாளிட்டு உயிரோடு இருப்பதைக் காட்டிலும் நின்று கொண்டே இறப்பது மேல் என்ற உறுதியுடையவனே மானம் உடையவன். எந்த இனம் அடிமைத் தனத்தில் அமைதியைக் காண்கிறதோ அந்த இனம் சிந்தித்தே தீரவேண்டும். இல்லையெனில் அதற்கு வாழ்வே யில்லை.
என் சொந்த நாடாகயிருந்தாலும் அந்த நாடு அடிமைநாடாக இருந்தால் அங்கே வாழ்வதைவிட ‘நரக’த்தில் வாழ்வதே மேலானது. வாழ்க்கையின் உயர்ந்த சட்டம் எது? தாய் நாட்டைப் பாதுகாப்பது. ஒரு கொள்கையை நாம் பின்பற்று கிறோம் என்றால் அதன் பொருட்டு சாவதற்கும் அணியமாக இருக்கிறோம் என்பது பொருள்.
கெட்ட நாற்றம் நிறைந்த சிறையில் என்னை அடைத்துப் போட்டு துன்புறுத்தினாலும் எனது இறுதி மூச்சு இருக்கிறவரை என் தாய் நாட்டை வழிபட்டுக்கொண்டு இருப்பதுதான் என் கடமை. அதுவே என் உயிர் மூச்சு.
ஈகம் செய்து பெறாத விடுதலை விடுதலையாகுமா? அந்த விடுதலைதான் நீண்டநாள் உயிர்வாழுமா? தன்மதிப்பு இல்லாத மாந்தர்களோ, இனமோ விடுதலையின் மீது பற்றுக்கொள்ள முடியாது. விடுதலையின் எல்லையை விரித்துக்கொண்டு செல்ப வர்கள் துறவிகள் அல்லர்; யோகிகள் அல்லர்; உழைத்துப் பிழைக்கும் மக்களே. இவர்களால்தான் விடுதலையை வென்றெடுக்க முடியும்.
நமது எண்ணத்தைச் செயலாக உருவாக்குகிற பட்டறைதான் நாடு. நமக்கென்று நாடு இல்லாவிட்டால் நமக்கென்று கலையேது? இலக்கியமேது? வாழ்வேது? விடுதலை என்பது போர்த்தன்மை வாய்ந்தது. வீரமும், மனச்சான்றும் உள்ளவர்கள் விடுதலைக்காகப் போராடுவார்கள். விடுதலையைப் பெற்ற வர்கள் கோழைகள் அல்ல. அரசியல் மாற்றத்திற்கு அவர்கள் அஞ்சாதவர்கள்.
விடுதலைக்குப் போரிடுவது என்பது புகழுக்காகவோ, பொருளுக் காகவோ, மதிப்பிற்காகவோ அல்ல. விடுதலை என்பது மக்களை நோக்கி வராது. விடுதலைக்காக நாம்தான் போராடவேண்டும். நாகரிகத்தின் உயர்ந்த பண்பு எது? பிறருக்குத் தன்னை ஈகம் செய்வது. வாழ்க்கையின் ஊற்று எளிய மக்களிடமிருந்துதான் கிளம்புகிறது. மாந்தனாகப் பிறந்து விட்டால் போதுமா? மனிதனாக வாழவேண்டாமா?
மற்றவர்களுடைய நன்மையை தன்னுடைய நன்மையாகக் கருதுகிறவன் எவனோ, அவனே! மாந்தர்களுள் சிறந்தவன். பகட்டாக வாழ்பவன் ஒழுக்கமாக வாழ முடியாது. ஒரு நாட்டிற்குப் பெருமை தரக்கூடியவர்கள் வேளாண்பெருங் குடிமக்களே.
உயர்ந்த கொள்கை இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல. செடிகொடிகள் வளர்வது போலத்தான் அந்த வாழ்க்கை. நீ செடி கொடியாக - காய்கறியாக இருக்க விரும்புகிறாயா?
சோம்பறித்தனத்தினாலோ, பொறுப்பின்மையாலோ, கோழைத் தனத்தினாலோ, பொதுநல உணர்ச்சியின்மை யினாலோ பெற்ற விடுதலையை பேணிகாக்கத் தவறிய நாடுகளின் அவல நிலையைப் படியுங்கள்.
உனது தாய்நாட்டின் மீது பற்று கொள் உனது முன்னோர்கள் வாழ்ந்து உறைந்தது இந்த மண்ணில்தான். உனது பெயர், புகழ், நீ யார் என்பதற்கு அடையாளம் உனது நாட்டில்தான் அடங்கி உள்ளது. உனது எண்ணங்களை அறிவுரைகளை உனது குருதியை தாய் நாட்டுக்குக்காக
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்
_மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
இவன் யார்?
இங்கர்ஸால் ஒரு நாஸ்திகன் என்று சிலர் சொல்கிறார்கள். இருக்கலாம். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் இவன் ஓர் அறிஞன். சுயமாகச் சிந்திக்கிற சக்தி யுடையவன் அப்படி தான் சிந்தித்ததைத் தைரியமாக வெளியிலே சொல்லும் ஆற்றலுடையவன் என்பதில் யாருக்கும் எவ்வித அபிப்பிராய பேதமும் இருக்க முடியாது.
ராபர்ட் க்ரீன் இங்கர்ஸால் (Robert Green Ingersall) என்ற இந்தக் கவிஞன் - ஆம்; இவன் ஒரு சிறந்த கவி என்பதில் என்ன சந்தேகம்? - 1833ம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 11ந்தேதி அமெரிக்கா நியூயார்க் மாகாணத்திலுள்ள ட்ரெஸ்டென் (Dresden) என்ற ஊரில் பிறந்தான். 1862ம் வருஷம் பிப்ரவரி மாதம் 13ந் தேதி ஈவா பார்க்கர் (நுஎய ஞயசமநச) என்ற மாதை மணம் புரிந்தான். 1899ம் வருஷம் ஜுலை மாதம் 21ந் தேதி டாப்ஸ் பெர்ரி (Dobb’s Ferry) என்ற இடத்தில் இறந்து போனான்.
இளமையில், இங்கர்ஸால் எப்பொழுதும் சுறுசுறுப்பா யிருப்பான்; ஓடி ஆடிக் கொண்டிருப்பான்; திறந்த மைதானத்தி லேயே இருந்து காலத்தைக் கழிக்க வேண்டுமென்பதில் இவனுக்கு ஒரு விசேஷ ஆவல். 21 வயதிற்குள் இவன் வக்கீல் பரீட்சையில் தேறி ஒரு நியாயவாதியாகப் பதிவு செய்து கொண்டான். சுமார் இருபது வருஷ காலம், தன் சகோதரனுடன் சேர்ந்து கொண்டு வக்கீல் தொழிலை நடத்தினான். இவனுடைய நாவன்மை, இவனை, வக்கீல் தொழிலின் முன்னணிக்குக் கொண்டு வந்தது. கட்சிக் காரர்கள் இவனை நாடி வந்தார்கள். கேட்பானேன்? பணம் ஏராளமாகக் குவிந்தது. வக்கீல் தொழிலில் பிரவேசித்த பத்தாவது வருஷம் இவன் இல்லினாய் (Illinois) மாகாணத்தின் அட்டர்னி - ஜெனரலாக நியமனம் பெற்றான். அமெரிக்காவிலேயே இவன் ஒரு சிறந்த நியாய வாதி என்று நியாயவாதிகளே பாராட்டத் தொடங்கினார்கள். 1868ம் வருஷம் இவன், இல்லினாய் மாகாணத்துக் கவர்னர் பதவிக்கு அபேட்சகனாய் நின்றான். ஆனால் நாஸ்திகன் என்ற காரணத்தி னால் தோல்வியடைந்தான்.
இங்கர்ஸாலின் பிரசங்கங்களைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு செல்வது அமெரிக்காவில் சர்வசாதாரண சம்பவம். இவன் பிரசங்கங்களை ஜனங்கள் பணங் கொடுத்துக் கேட்பார்கள். பிரசங்கத்தின் மூலமாக மட்டும் வருஷந்தோறும் இவனுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த வருமானம், அமெரிக்க பிரசிடெண்டின் வருஷ வருமானத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமானது. இவனுடைய வருமானத்தை வேறு தினுசாகக் கணித்துப் பார்ப்போ மானால், அமெரிக்காவிலேயே மிகச் சிறந்த பிரசங்கிகளான இருபத்தைந்து பேர் ஒரே சமயத்தில் எவ்வளவு சம்பாதிப் பார்களோ அவ்வளவு வருமானம் இவனுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், இங்கர்ஸால் பணத்தினால் பெருமை கொள்ளவில்லை. வாய்த் திறமையினால் ஏராளமாகச் சம்பாதித்ததைக் கைத்திறமை யினால் தாராளமாகக் கொடுத்துவிட்டான். மற்றவர்கள் துன்பப் பட்டுக் கொண்டிருப்பதை இவனால் பார்த்துச் சகித்துக் கொண் டிருக்க முடியாது. இவனுடைய குடும்பப் பாதுகாப்பின் கீழ் நான்கு குடும்பங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தன. பலருக்கு இவன் மனோ நிம்மதியைக் கொடுத்த தினாலேயோ என்னவோ, இவனுக்கு நிம்மதியான மரணம் கிட்டியது. மரண வேதனை என்பதை இவன் அநுபவிக்கவே யில்லை.
இங்கர்ஸாலைப் பற்றி எவ்வித அபிப்பிராயமும் கொள்ள யாருக்கும் உரிமையுண்டு. ஆனால் இவனுடைய எழுத்தில் ஆழமான கருத்துக்களும் புதிய கருத்துக்களும் அடங்கியிருக்கின்றன வென்பதில் யாரும் கருத்து வேற்றுமை கொள்ள மாட்டார்க ளென்று கருதுகிறேன். இந்த ஒரு காரணத்திற்காகவே இவனுடைய பிரசங்கத்தில் ஒன்றான ‘The Liberty of Man, Woman and Child’ என்பதனை மொழி பெயர்த்து ‘மானிட ஜாதியின் சுதந்திரம்’ என்ற தொகுப்புப் பெயர் கொடுத்து வெளியிட்டிருக்கிறேன். இதன் மூலமாகத் தமிழ் நாட்டில், சிந்தனை செய்கிற சக்தி உதயமாக வேண்டு மென்பது என் பிரார்த்தனை.
விக்ரம
ஆனி
30
வெ. சாமிநாத சர்மா
13-7-40
இங்கர்ஸால் மற்ற இடங்களில் என்ன சொல்லி யிருக்கிறான்?
அதிகமான நன்மையைச் செய்யுஞ் சக்தியை மனிதனுக்கு அளிப்பது சத்தியந்தான். சத்தியமே கவசம்; சத்தியமே ஆயுதம்; அதுவே ஆத்மாவின் விளக்கு
மனிதனுடைய சிறந்த தொழில், நாணயமான கடவுளைச் சிருஷ்டிப்பது தான்.
மதமானது, நண்பர்களுக்குப் பதிலாகச் சத்துருக்களைத் தான் சிருஷ்டிக்கிறது.
அடிமைத் தனத்தின் மூலமாக மோட்சத்தை யடைவது கேவலமானது.
பழமையை அழிக்கிறவர்கள், புதுமையைச் சிருஷ்டிக்கி றார்கள்.
அறியாமைதான் துயரத்தின் தாய்.
மனதுக்கும் சுதந்திரத்திற்கும் உள்ள சம்பந்தம்
அறியாமையைத் தவிர்த்து வேறொர் அடிமைத்தனம் இல்லை. சுதந்திரம் என்பது அறிவின் குழந்தை.
மனிதனுடைய சரித்திரம் என்ன? அடிமைத்தனம், அநியாயம், மிருகத் தன்மை இவைகளின் சரித்திரமும், இவற்றோடு போராடிப் போராடி மெதுவாகவும் அநேக சங்கடங்கள் பட்டுக் கொண்டும் முன்னுக்கு வந்திருக்கிறானே அந்த வரலாறும் சேர்ந்ததுதான் மனிதனுடைய சரித்திரம். இவன் - இந்த மனிதன் - புரோகிதர்க ளுடையவும் அரசர் களுடையவும் விளையாட்டுப் பொருளாகவும் இரையாகவும் இருந்திருக் கிறான். மூட நம்பிக்கையினுடைய, கொடுமை நிறைந்த பலாத்கார சக்தியினுடைய ஆகாரமாக இருந்திருக்கிறான். பலாத்கார சக்தியானது முடிதரித்துக் கொண்டு, பயத்தின் மூலமாக அறியாமையை ஆட்சி புரிந்து வந்திருக்கிறது. நயவஞ்சகம், கொடுங் கோலாதிக்கம் என்ற இரண்டு கழுகுகள் மனிதனுடைய சுதந்திரங்களைத் தின்று வந்திருக்கின்றன. இவை யனைத்தினின்றும் தப்ப ஒரே ஒரு வழி இருந்தது; அஃது இப்பொழுதும் இருக்கிறது. அதுதான் அறிவின் அபிவிருத்தி. மனித னுடைய உழைப்புச் சக்தியின் மீது, கொடுங்கோலாதிக்கம் ஏறிக் கொண்டது; அவனுடைய அறிவு, மூட நம்பிக்கை யென்ற சங்கிலி யால் கட்டப்பட்டிருக்கிறது. சுதந்திரத்தின் விரோதிகள் எதையும் செய்யாமல் விட்டுவிட வில்லை. மனிதனுடைய உரிமைகளை அழிக்க எல்லா முறைகளும், எல்லாத் தந்திரங்களும், எல்லாக் கொடுமைகளும், எல்லா அநியாயங்களும் கையாளப்பட்டிருக் கின்றன; செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பெரிய போராட்டத் திலே, ஒவ்வோர் அட்டூழியமும் சன்மானிக்கப் பட்டிருக்கிறது; ஒவ்வொரு நல்லொழுக்கமும் தண்டிக்கப்பட்டிருக்கிறது. படிப்பது, எழுதுவது, சிந்தனை செய்வது, ஆராய்ச்சி நடத்துவது முதலிய அனைத்துமே குற்றங்களாகக் கருதப்பட்டு வந்திருக்கின்றன. விஞ்ஞான சம்பந்தப்பட்ட ஒவ்வோர் ஆராய்ச்சியும் தீண்டப்படாத பொருளாகவே இருந்து வந்திருக்கிறது.
மானி ஜாதியின் முன்னேற்றத்தைத் தடுக்க, எல்லாத் தேவாலய பீடங்களும், எல்லாச் சிங்காதனங்களும் ஒன்று சேர்ந்து கொண்டிருக் கின்றன. மானிட சமூகம் அதனுடைய நன்மைக்காக வேலை செய்யக் கூடாதென்று அரசன் கூறுகிறான். அப்படியே புரோகிதனும், அந்த மானிட ஜாதியானது, தனது நன்மையை முன்னிட்டுச் சுயமாகச் சிந்திக்கக் கூடாதென்று சொல்கிறான். ஒன்று, கைகளுக்கு விலங்கிடுகிறது; மற்றொன்று, ஆத்மாவுக்கு விலங்கிடு கிறது. இந்த இரண்டு பேருடைய கேவலமான நிருவாகத்தின் கீழ், மானிட அறிவு என்னும் கழுகானது, நயவஞ்சகம் என்னும் சர்ப்பமாக மாறி விட்டது.
மானிட சமூகமே சிறைப்படுத்தப்பட்டு விட்டது. இந்தச் சிறைக் கம்பிகளின் வழியாகச் சில சந்தர்ப்பங்களில் வெளிச்சத்தின் கிரணங்கள் வந்து கொண்டிருக்கின்றன வென்பது வாஸ்தவம். விஞ்ஞான தேவதை யானவள், வெளுத்துப் போன - ஆனால் சிந்தனை நிறைந்த - தனது முகத்தை, இந்தச் சிறைக் கம்பிகளண்டை பொருத்தி வைத்துக் கொண்டு, மானிட ஜாதியின் முன்னேற்றமாகிய உதயத்தை எதிர்பாத்து நிற்கிறாள். சிறைக் கம்பிகள் ஒவ்வொன்றாக உடைந்து வருகின்றன. ஒரு சில மஹான்கள், இந்தச் சிறைக் கம்பி களினின்றும் வெளியேறி, தங்கள் சகோதரர்களுடைய விடுதலைக் காக ஆயுள் பூராவையும் அர்ப்பணஞ் செய்திருக்கிறார்கள்.
சென்ற சில வருஷங்களுக்கு முன்னர்தான், மானிட சமூகத்தின் இதயத்தில் ஒரு விழிப்பு ஏற்பட்டிருக்கிறது. ‘ஒரு முடிதரித்த கொள்ளைக் காரன், தனக்காக எங்களை வேலை செய்யச் சொல்ல என்ன அதிகார மிருக்கிற’ தென்று மனிதர்கள் கேட்கத் தொடங்கி னார்கள். இந்த மாதிரி யான கேள்வியை எவனொருவன் கேட்கி றானோ அவன் துரோகி என்று அழைக்கப்பட்டான். இன்னும் சிலர் கேட்கிறார்கள், அலங்கார உடை தரித்த நயவஞ்சகர்கள், எங்கள் சிந்தனா சக்தியின் மீது ஆட்சி நடத்த என்ன உரிமை பெற்றிருக்கி றார்களென்று. அப்படிக் கேட்கிறவர்கள், மத நம்பிக்கையில்லாத வர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த மாதிரி மனிதன் ஆராய்ச்சி செய்து கொண்டு போனால் அஃது எங்கேதான் கொண்டு போய் முடியுமென்று புரோகிதனும் அரசனும் சேர்ந்து கேட்கிறார்கள். இதனால் இவர்கள் அப்பொழுதும் கூறினார்கள், இப்பொழுதும் கூறுகிறார்கள், மனிதன் சுதந்திரமாயிருப்பது ஆபத்து என்று. ஆனால் நான் இதை ஆட்சேபிக்கிறேன். அறிவுக் கடலிலே, எல்லா விதமான கப்பல்களுக்கும் இடமிருக்கிறது. ஞான ஆகாசத்திலே, எந்த விதமான இறக்கைகளோடு கூடிய பறவைகளும் பறக்கலாம்.
சுயமாகச் சிந்தனைச் செய்யாத மனிதன் அடிமை. அவன், தனக்கு மட்டும் துரோகியல்ல; மற்றவர்களுக்கும் துரோகம் செய்தவனாகிறான்.
ஒவ்வொரு மனிதனும், நீல ஆகாசத்தின் கீழே, நட்சத்திரப் பிரகாசத்தின் கீழே, எல்லையற்ற இயற்கைக் கொடி மரத்தின் கீழே, சகோதர மனிதனுக்குச் சமதையாகத் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.
எல்லோராலும் அறிய முடியாத எந்த ஒரு பரம்பொருள் உண்டோ அந்தப் பரம்பொருளின் முன்னிலையில் நிற்கும் எல்லோருக்கும், சிந்தனை செய்ய உரிமையுண்டு. பிறப்பு இறப் பென்னும் பெரிய பிரச்னை களைப் பற்றி அறிந்து கொள்ளும் விஷயத்தில் எல்லோரும் ஒரே விதமான சிரத்தைதான் கொண்டிருக் கிறார்கள். நான் கோருவதெல்லாம், நான் கேட்பதெல்லாம், எண்ணவும், எண்ணியதை வெளியிலே சொல்லவும் உரிமை வேண்டு மென்பதுதான். இவ்வளவுதான் நான் வேண்டுவது. சரியான உண்மையைத்தான் நான் கூறுகிறேனென்று நான் சாதிக்க வில்லை. எது உண்மை யென்று நான் கருதுகிறேனோ அதையே நான் கூறுவதாகச் சொல்கிறேன். உண்மையின் எல்லா அமிசங்களையும் கூறி விடுவதாக நான் பாசாங்கு செய்ய வில்லை.
எண்ணத்தின் சிகரத்தில் நான் ஏறி நிற்பதாகக் கூறவில்லை. அப்படியே நான் விஷய ஆராய்ச்சியாகிற ஆழத்தில் இறங்கிப் போயிருப்ப தாகவும் சாதிக்கவில்லை. என் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகின்றனவோ அவற்றைச் சொல்ல எனக்கு உரிமை இருக்க வேண்டு மென்றுதான் நான் கோருகிறேன். இந்த உரிமையை எவனேனும் எனக்கு மறுப்பானாகில் அவன் அறிவு நிரம்பிய ஒரு திருடன், கொள்ளைக் காரன் என்றுதான் நான் சொல்வேன்.
ஆத்மாவைச் சுற்றிப் பிணைக்கப்பட்டிருக்கும் இந்தச் சங்கிலிகளை எடுத்து விடுங்கள். இவற்றை உடைத்தெறியுங்கள். சிந்தனை செய்யும், உரிமை, சுயமாக எண்ணும் உரிமை எனக்கு இல்லையானால் என்னிடத்தில் ஏன் மூளை இருக்கிறது? எனக்கு, சிந்தனை செய்யும் உரிமை யில்லையானால், மூன்று பேர் அல்லது நான்கு பேர் அல்லது எத்தனை பேரோ சேர்ந்து கொண்டு, ஏதேனும் ஒரு மதக் கோட்பாட்டில் கையெழுத்திட்டு விட்டு, ஒரு வீட்டைக் கட்டி அதன் மீது ஒரு கோபுரத்தை நிறுத்திவைத்து, அதில் ஒரு மணியையும் கட்டித்தொங்க விடுகிறார்களே அவர்களுக்கு மட்டும் இந்தச் சிந்தனை செய்யும் உரிமை உண்டா? உலகத்திலேயே யுள்ள நல்ல மனிதர்கள், எண்ண உலகத்தில் சவுக்கடி கொடுக்கப்படுவதை - அதாவது பலாத்காரம் பிரயோகிக்கப்படுவதை-க்கண்டு சலிப் படைந்து போய் விட்டார்கள். அவர்கள், விலங்குச் சங்கிலியையும் தொழுக்கட்டையையும் நினைக்கிறபோது நடுங்கிப் போகி றார்கள்.அவர்கள் சுதந்திரமா யிருக்கிறார்கள். அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் அளிக்கிறார்கள். தான் பெற்றிருக்கிற சுதந்திரத்தை மற்றவர்களுக்கு அளிக்க எவனொருவன் மறுக்கிறானோ அவன் அயோக்கியன்; களங்கமுள்ளவன்.
முற்காலத்தில் நமது முன்னோர்கள், தங்களுடைய சௌகரியத் திற்குத் தகுந்தபடி ஜனங்களை நம்புமாறு செய்ய முடியும் என்று கருதினார்கள். நமது மூதாதையர்கள், பலாத்காரத்தினால் ஒரு மனிதனுக்கு எண்ணத் திருப்தி உண்டாக்கி விட முடியும் என்று உண்மையில் நம்பினார்கள். மூளையிலே ஏற்பட்ட ஒரு முடிவை, அறிவு ஆராய்ச்சி காரணமாக ஏற்பட்ட ஓர் அபிப்பிராயத்தை - தொந்திரவு படுத்தி மாற்ற முடியுமா? அல்லது ஜாதிப் பிரஷ்டம் செய்து தான் மாற்ற முடியுமா? இங்ஙனம் தொந்திரவுகளுக்குட் படுத்துவதன் மூலமாகவும், ஜாதிப் பிரஷ்டம் செய்வதன் மூலமாக வும் உங்களால் என்ன செய்ய முடியும், நீங்கள் என்ன செய்திருக்கி றீர்கள் என்பதை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன். லட்சக்கணக் கான மக்களை நீங்கள் நயவஞ்சகர்களாக்கி விடலாம். ‘என் மனதை நான் மாற்றிக் கொண்டு விட்டேன்’ என்று ஒரு மனிதனைச் சொல்லுமாறு நீங்கள் செய்து விடலாம். ஆனால் அவன் மட்டும் எப்பொழுதும் போல் ஒரே அபிப்பிராயமுடையவனாகத்தான் இருக்கிறான். அவனை இரும்புச் சங்கிலிகளினால் பிணைத்துக் கட்டுங்கள்; அவன் கால்களை இரும்பு பூட்ஸுகளிலே திணித்து நசுக்குங்கள்; வேதனை யளிக்கக் கூடிய அந்தப் புனிதமான யந்திரம் இருக்கிறதே அதில் அவனைக் கடைசி மூச்சு இருக்கிற வரை படுக்க வையுங்கள்; வேண்டுமானால் அவனை நெருப்பிலிட்டுக் கொளுத்துங்கள்; ஆனால் அவனுடைய சாம்பல், முன் போல் ஒரே மாதிரியான அபிப்பிராயத்தையே கொண்டிருக்கும்.
பழைய காலத்திலிருந்த நமது மூதாதையர்கள் - அவர்களைப் பற்றி நான் என்ன நல்லது சொல்ல முடியும்? அவர்கள் இறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல முடியும். - ஒரு மனிதனைப் பலவந்தப்படுத்தி, தங்களிஷ்டப்படி நினைக்குமாறு செய்யலாம் என்று எண்ணினார்கள். அந்த எண்ணம், இப்பொழுதும் உலகத்தின் சில பாகங்களில் - அமெரிக்காவில் கூட - இருந்து கொண்டிருக் கிறது. ‘அந்த மனிதனோடு நாங்கள் வியாபாரம் செய்ய மாட்டோம்; அவனுக்கு நாங்கள் ஓட் செய்ய மாட்டோம்; அவன் வக்கீலா யிருந்தால் அவனை அமர்த்திக் கொள்ள மாட்டோம்; அவன் ஒரு வைத்தியனா யிருந்தால், அவன் மருந்தை வாங்கி உட்கொள்வதற்கு முன்னர் நாங்கள் இறந்து போய் விடுவோம்; அவனை விருந்துக்கு அழைக்க மாட்டோம்; அவனை ஜாதிப் பிரஷ்டம் செய்வோம்; அவன் எங்கள் தேவாலயத்திற்கு வர வேண்டும்; எங்கள் மதக்கோட் பாடுகளில் அவன் நம்பிக்கை கொள்ள வேண்டும்; எங்களுடைய கடவுளையே அவன் வணங்க வேண்டும்; இல்லாவிட்டால் அவனுக்கு நாங்கள் எவ்விதத்திலும் உதவி செய்ய மாட்டோம்’ என்றெல்லாம் இப்பொழுதும் நமது வைதிகர்கள் சிலர் கூறுகிறார்கள்.
நான் மேலே சொன்ன பழைய காலத்தவர், எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாகச் சிந்தனை செய்ய வேண்டும், என்ன வேண்டு மென்று கருதினார்கள். உலகத்தில், யந்திர சம்பந்தமாக எவ்வளவோ அபிவிருத்திகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், இரண்டு கடிகாரங்கள் ஒரே மாதிரி ஓடுவதில்லை. அப்படியிருக்க, அறிவிலும் சுபாவத்திலும், கல்வி யிலும் ஆசையிலும், நிலைமை யிலும் சுற்றுப் புறத்திலும் வெவ்வேறா யுள்ள பலரும், ஆசாபாசங்கள் பலவாகக் கொண்டுள்ள மானிடர் பலரும் ஒரே மாதிரியாக உணரவும் எண்ணவும் வேண்டுமென்று நீங்கள் எப்படி வற்புறுத்த முடியும்? எல்லையற்ற ஒரு கடவுள் இருப்பாரானால், அவர் நம்மெல்லோரையும் சிருஷ்டித் திருப்பாரானால், நாமெல்லோரும் ஒரே மாதிரியாகவே நினைக்க வேண்டுமென்பது அவர் விருப்பமா யிருக்குமானால், ஏன் அவர் ஒருவருக்குக் குறைவான அறிவையும் மற்றொருவருக்கு அதிகமான அறிவையும் கொடுத்திருக்க வேண்டும்? எல்லோரும் ஒரே மாதிரியாக எண்ண வேண்டும், உணர வேண்டும் என்பது நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன் ஏற்பட்டிருக்க வேண்டும்?
நமது முன்னோர்கள், எப்படி மானிட ஜாதியைத் துன்புறுத்தி னார்கள் என்பதைப் பற்றிப் புஸ்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் அவைகளை நான் பாராட்ட முடியவில்லை. அவை என் ஆத்மாவுக்கு வெளிச்சம் கொடுக்கவில்லை. மதத்தின் பெயரால் செய்யப்பட்ட அட்டூழியங்களை என்னால் பாராட்ட முடிய வில்லை.
கட்டை விரல் முறுக்காணி என்பதொன்றுண்டு. அதாவது இரண்டு இரும்புத் துண்டுகள். அவைகள் நழுவி விழக்கூடா தென்பதற்காக உள் பக்கம் குத்தூசிகள் இருக்கும். இந்த இரண்டு இரும்புத் துண்டுகளும் ஒரு முறுக் காணியால் இணைக்கப்பட் டிருக்கும். எந்த ஒரு மனிதனேனும் ஞான ஸ்நானத்தினால் பயனில்லை யென்று சொன்னாலும் அல்லது ‘ஒரு மனிதன் தண்ணீரில் முழுகிப் போகாமல் காப்பாற்றப்பட வேண்டு மென்பதற்காக, ஒரு மீனானது அவனை விழுங்கிவிட்டது என்பதை நான் நம்பவில்லை’ என்று சொன்னாலும், அவனுடைய கட்டை விரல்கள் இந்த இரண்டு இரும்புத் துண்டுகளிடையில் வைக்கப்பட்டு, அன்பின் பெயராலும், சர்வ ஜீவதயையின் பெயராலும், மேற்படி முறுக்காணியைத் திருகி விடுவார்கள். இப்படிச் செய்தவுடன் பெரும்பாலோர் ‘நான் சொன்னது தவறு’ என்று ஒப்புக்கொண்டு விடுவார்கள். நானும் அப்படித்தான் செய்திருப்பேன். ‘நிறுத்துங்கள்; நான் எதை எதை ஒத்துக் கொள்ள வேண்டு மென்று நீங்கள் கூறுகிறீர்களோ அவற்றையெல்லாம் நான் ஒத்துக் கொள்கிறேன். ஒரு கடவுள் என்று சொல்கிறீர்களா, அல்லது லட்சக்கணக்கான கடவுளர்கள் இருக்கி றார்கள் என்று சொல்கிறீர்களா, ஒரு நரகமா அல்லது கோடிக் கணக்கான நரகங்களா எப்படிச் சொல்லச் சொன்னாலும் சொல்கி றேன்; நீங்கள் தொந்திரவு மட்டும் செய்யாதீர்கள்; நிறுத்துங்கள்’ என்று நானும் சொல்லியிருப்பேன்.
பெரும்பாலோர் இப்படித் தங்கள் அபிப்பிராயத்தில் பின் வாங்கினாலும், ‘ஒரு மயிரிழை கூட எங்கள் அபிப்பிராயத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்று சொல்லக்கூடியவர்களும் ஆங்காங்கு இருந்தார்கள். தங்கள் அறிவுப் பெருக்கத்தின் விளை வாகக் கண்ட முடிவுக்காக இறக்கவும் சம்மதித்த புனித ஆத்மாக்கள் எத்தனையோ பேர் இருந்தார்கள். இத்தகைய மகான்கள் இருந்திரா விட்டால், நாம் இன்று காட்டு மிராண்டிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். ஒவ்வொரு யுகத்திலும் இந்த மாதிரியான வீர புருஷர்கள் உதித்திராவிட்டால், நாம் இப்பொழுது நரமாமிச பட்சணிகளாய், நமது தேகத்தில் காட்டு மிருகங்களின் உருவங் களைப் பச்சை குத்திக் கொண்டு, சர்ப்பங்களைத் தெய்வமாகப் போற்றிய வண்ணம் அவற்றைச் சுற்றி நாட்டியமாடிக் கொண்டிருப் போம்.
ஆகையால், எதிர்ப்பு, துவேஷம், மரணம் இவைகளை யெல்லாம் பொருட்படுத்தாமல், தாங்கள் எதை உண்மை யென்று நம்பினார்களோ அதற்காகப் பெருமையோடு தலை நிமிர்ந்து நின்ற ஒவ்வொரு மகானுக்கும் நாம் வணக்கஞ் செலுத்துவோமாக.
இப்படிப் பட்டவர்கள்தான் வீரர்கள். ஆனால் நமது மூதாதையர் வீர வாழ்க்கைக்கு மதிப்புக் கொடுக்கவில்லை தன் கொள்கையை மாற்றிக் கொள்ள எவனொருவன் மறுத்தானோ அவன் மன்னிக்கப்படவேயில்லை. மேலே சொன்ன அந்தக் கட்டைவிரல் முறுக்காணியை, கடைசி திருகுவரை திருகிவிட்டு, அப்படியும் அவன் இணங்கா விட்டால், ஓர் இருட்டறைக்குள்ளே தள்ளி, அங்குக் குடி கொண்டிருக்கும் மௌனத்திலும் இருட்டிலும் அவனைத் தவிக்க விட்டு விடுவார்கள். அதன்பெயரால் இங்ஙனம் செய்தார்கள்! அன்பின் பெயரால்! தயையின் பெயரால்! கருணை நிறைந்த கிறிஸ்துவின் பெயரால்!
கழுத்துக்குத்து யந்திரம் என்ற ஒரு வகை உபத்திரவ யந்திரத்தைப் பார்த்திருக்கிறேன். இரும்பு வளையம் ஒன்றிருக்கும். அதன் உட்புறத்தில் ஊசி போல் நூற்றுக்கணக்கான ஆணிகள் இருக்கும். இதனைக் கழுத்தில் மாட்டி விடுவார்கள். இதனை மாட்டிக் கொண்டு ஒருவன் நடக்கவோ உட்காரவோ முயற்சி செய்வானாகில், இந்த வளையத்து ஆணிகள் அவன் கழுத்தைச் சுறுக்கு சுறுக்கென்று குத்தும். சொற்ப நேரத்திற்குள் அவன் தொண்டை வீங்கிவிடும். மூச்சுவிட முடியாமல் திணறிச் செத்துப் போய் விடுவான். இந்த மனிதன் என்ன விதமான குற்றத்தைச் செய்திருக்கக்கூடு மென்று நினைக்கிறீர்கள்? ‘நமது பரமபிதாவாகிய கடவுள், மனிதர்களின் குழந்தைகளாகிய நம்மை சாசுவதமான நாசத்திற்கு உட்படுத்த மாட்டார்’ என்று இரு கன்னங்களிலும் கண்ணீர் வழிய இவன் சொல்லியிருக்கக் கூடும். அவ்வளவுதான்.
மற்றொரு வகை உபத்திரவ யந்திரத்தையும் நான் பார்த்திருக் கிறேன். இதற்குத் ‘தோட்டியின் மகள்’ என்று பெயர். கைப் பிடியோடு கூடிய ஒரு கத்தரிக்கோல் இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுதுள்ள படி இந்தக் கைப்பிடிகளுக்கு - மேற்புறமாக - அதாவது கத்தரிக்கு இரண்டு இறக்கைகள் இருக் கின்றன. இவற்றின் கீழ்ப் பாகத்தில் கைப்பிடிகள் சாதாரணமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் போலவே கத்தரி இறக்கை களின் நுனிப் பாகங்களிலும் - கைப்பிடி அமைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு இறக்கைகளையும் இணைக்கிற சந்திப்பில் ஓர் இரும்பு வளையம் சேர்க்கப் பட்டிருக்கும். மேலே யுள்ள இரண்டு கைப் பிடிகளில் இரண்டு கைகளைக் கட்டி விடுவார்கள்; கீழேயுள்ள இரண்டு பிடிகளில் இரண்டு கால்களைக் கட்டி விடுவார்கள். மத்தியிலேயுள்ள இரும்பு வளையத்தில் தலையைப் பலவந்தமாக நுழைக்கச் செய்வார்கள். இந்த மாதிரியான நிலையில் ஒருவனைச் சிறிது நேரம் வைத்தால் அவனுடைய நரம்புகளில் வலியெடுத்து அவனுக்குப் பைத்தியம் பிடித்துப் போய்விடும். கடைசியில் அந்தப் பைத்தியங் காரண மாகவே அவன் இறந்து போவான். மரணத்தோடுதான் அவன் உபாதி களெல்லாம் ஒழியும். ‘உன்னை ஒரு கன்னத்தில் அடித்தால் அவனுக்கு மற்றொரு கன்னத்தையும் காட்டு’ என்று எந்தப் பெரிய மனிதர்கள் உபதேசம் செய்தார்களோ அவர்களாலேயே இங்ஙனம் செய்யப்பட்டு வந்தது.
பரண் மாதிரியான ஒரு வகை வேதனா யந்திரமுண்டு. இதற்குச் சங்கிலிகள் போட்டு வைத்திருப்பார்கள். ஒவ்வோர் கோணத்திலும் முறுக் காணிகள் போட்டு முடுக்கியிருப்பார்கள். (கிறிஸ்தவ தர்மத்தை ஏற்றுக் கொள்ளாத) குற்றவாளியை இந்தப் பரண் மீது படுக்க வைத்து தேகத்தின் ஒவ்வோர் அங்கத்தையும் சங்கிலியால் கட்டிவிட்டு, முறுக்காணியைப் போட்டு முடுக்குவார்கள். அப்பொழுது அவன் தேகத்தின் மூட்டுக்கு மூட்டு தளர்ந்து விடும். பக்கத்திலிலேயே ஒரு வைத்தியன் நின்று கொண்டு நாடியைப் பரீட்சித்துக் கொண்டிருப்பான். ஏன்? அவன் உயிரைக் காப்பாற்றும் பொருட்டா? ஆம். மீண்டும் அவனை அந்த வேதனா யந்திரத்தில் படுக்க வைத்து உபத்திரவிப்பதற்காக!
நாகரிகத்தின் பெயரால், சட்டம், ஒழுங்கு இவற்றின் பெயரால், கருணையின் பெயரால், மதத்தின் பெயரால், கருணை வள்ளலான கிறிஸ்து நாதரின் பெயரால், இவையெல்லாம் செய்யப்பட்டன வென்பது உங்கள் ஞாபகத்திலிருக்கட்டும்.
இந்தப் பயங்கரமான சம்பவங்களைப் பற்றி நான் படிக்கிற போதும், எண்ணுகிற போதும் சில சமயங்களில் நானே இத் துன்பங்களை யெல்லாம் அநுபவித்த மாதிரி ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது. தேசப் பிரஷ்டமாகிய கரை மீது நின்று கொண்டு, கண்களில் நீர் தளும்ப, என் வீட்டையும் என் தாய் நாட்டையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்; என் கையிலிருந்து நகங்களை உரித்தெடுத்து விட்டு, ரத்தஞ் சொட்டுகிற அந்த இடத்தில் கூர்மையான ஊசிகளைச் சொருகுகிறார்கள்; இரும்பு பூட்ஸ்களில் என் பாதங்களைத் திணித்து விட்டார்கள்; இருட்டறையில் சங்கிலியால் என்னைக் கட்டிப் போட்டு விட்டிருக்கிறார்கள்; அந்தச் சந்தர்ப்பத்தில், என்னை யாரோ விடுதலை செய்வதற்காக வந்து கொண்டிருக்கும் காலடிச் சப்தம் கேட்கிறது; தூக்கு மேடையின் மீது நான் நிறுத்தி வைக்கப் பட்டிருக்க, பிரகாசிக்கின்ற வாளாயுதம் என் கழுத்தின் மீது விழுகிறது; வேதனாயந்திரத்தின் மீது நான் படுத்துக் கொண்டிருக்க, அப்பொழுது நயவஞ்சகர்களான புரோகிதர்களின் வெண்மையான முகங்கள் என்னைக் குனிந்து பார்க்கின்றன; என்னை, என் மனைவி மக்களிடமிருந்து பிரித்து, வீட்டினின்று அப்புறப்படுத்திக் கொண்டு போய், விலங்கிட்டு, நான்கு பேர் கூடும் சதுக்கத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்; என்னைச் சுற்றி விறகுக் கட்டைகளை அடுக்குகிறார்கள்; உடனே என் தேகத்தைச் சுற்றி நெருப்பு எரிகிறது; என் கண்கள் குருடாகி விடுகின்றன; துவேஷமானது, தன் எண்ணிறந்த கைகளால், என் தேகத்துச் சாம்பலை எடுத்து நாற் புறத்துக் காற்றிலும் வீசி விடுகின்றது. இப்படியெல்லாம் நான் உணர் கிறேன். உடனே ‘நாம் வாழ்ந்து கொண்டிருக்குங் காலத்தில் ஆண், பெண், குழந்தை இவர்களின் சுதந்திரங்களைக் காப்பாற்றவும் வலுப்படுத்தவும் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டு’மென்று பிரதிக்ஞை செய்து கொள்கிறேன்.
என்னிடத்திலேயுள்ள நியாய புத்தி, கருணை, நேர்மை, அறிவு வளர்ச்சி முதலியவைகளைப் பொறுத்த விஷயங்கள் இவை. தனக்கு இன்ன விதமான உரிமை தேவை யென்று கூறி அதே உரிமையை, மற்றவர்களுக்கு அளிக்க மறுக்கும் ஒருவன் இந்த உலகத்தில் இருப்பானாகில், அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தி லேயே வசித்தவனாகிறான். என்னுடைய யோக்கியத் தன்மையைப் பொறுத்த விஷயமிது. எவனொருவன், தனக்கென்று சில அறிவு சம்பந்தப்பட்ட உரிமைகள் - அதாவது எண்ண உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன - வேண்டுமென்று பாத்தியங் கொண்டாடிக் கொண்டு, அதே சமயத்தில் அதே உரிமைகளை மற்றவர்களுக்கு வழங்க மறுக்கிறானோ அவன் அயோக்கியன்; சுய நலக்காரன்; மிருகத்தன்மை வாய்ந்தவன்.
இஃது அறிவு வளர்ச்சியைப் பொறுத்த விஷயமாகும். எவன், தன்னுடைய நேர்மையான எண்ணத்திற்கு மற்றொருவனைப் பொறுப்பாளியாக்குகிறானோ அவனுடைய மூளை சீர்கெட்டிருக் கிறது; குழம்பிப் போயிருக்கிற தென்பதுதான் அர்த்தம். இஃது அறிவு வளர்ச்சியைப் பொறுத்த விஷயமென்பதையே மீண்டும் கூறுகிறேன்.
சமீபத்தில் நான், மனிதனால் செய்யப்பட்ட எல்லாப் பொருள்களின் மாதிரிகளையும் பார்க்க நேரிட்டது. நீரிலே மிதந்து செல்லக் கூடிய எல்லாக்கருவிகளையும் நான் கண்டேன். நிர்வாணமா யிருந்த ஒரு காட்டு மிராண்டி - ஆம்; அப்படிப்பட்டவர்கள் தான் நமது மூதாதையர்கள்; அவர்கள் இரண்டு அங்குல நீளம் பற்களும், தலைக்குப் பின்புறம் சிறிதளவு மூளையும் உடையவர்களாயிருந் தார்கள் - அந்தக் காட்டுமிராண்டியினால் தள்ளிச் செல்லப்பட்ட ஒரு சிறு தெப்பம் முதல், நூறு பீரங்கிகளையும் மைல் கணக்கான பாய்விரிப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள பெரிய யுத்தக் கப்பல் வரை பார்த்தேன். அந்தச் சிறிய தெப்பம் முதல், எந்தப் பெரிய கப்பலானது அதன் மனச் சாட்சியாகிற திசையறி கருவியின் துணை கொண்டு நியூயார்க் துறை முகத்தினின்று புறப்பட்டு, மூவாயிரம் மைல் தூரம் எவ்விதத் தங்கு தடையுமின்றிச் செல்கிறதோ அந்தப் பெரிய கப்பல் வரை பார்த்தேன்.
காட்டு மிராண்டியான மனிதன், தான் வசித்த குகையினின்றும் தவழ்ந்து சென்று தன் ஆகாரத்திற்காக ஒரு பாம்பை அடித்துக் கொல்ல ஒரு தடியை உபயோகித்தானல்லவா அந்தத்தடிமுதல், இரண்டாயிரம் பவுன் நிறையுள்ள குண்டுகளை வீசியெறியக் கூடிய பெரிய பீரங்கி வரையில் பார்த்தேன்.
நமது மூதாதையர்கள் தங்கள் தாய் நாட்டைக் காப்பாற்று வதற்காகப் போர்க்களத்திற்குச் சென்ற காலையில் ஆமை யோட்டைக் கவசமாக அணிந்து கொண்டார்களே, அந்த ஆமை யோடு முதல், தற்காலத்து இரும்புக் கவசம் வரையில் எல்லாவற்றை யும் பார்த்தேன்.
அந்தக் காட்டு மிராண்டிகளின் தம்பட்டம் முதல், இனிமை பயக்கும் தற்காலச் சங்கீதக் கருவிகள் வரை பார்த்தேன்.
அந்தக் காட்டு மிராண்டிகள், மஞ்சள் மண்ணின் மீது எழுதிய சித்திரங்கள்முதல் தற்காலத்துச் சித்திராலயங்களை அலங்கரிக்கும் சித்திரங்களையும், மற்றச் சிற்ப வகைகளையும் நான் பார்த்தேன்.
அந்தக் காட்டு மிராண்டிகள், மிருகங்களின் தோலின் மீதும், இலைகளின் மீதும், மரப்பட்டைகளின் மீதும் எழுதி வைத்துப் போன புத்தகங்கள் முதல், தற்காலப் புத்தகாலயங்களை அழகு படுத்தும் பெரிய புத்தகங்கள் வரை எல்லாவற்றையும் பார்த்தேன். புத்தகசாலைகளைப் பற்றி நான் பேசுகிற போது, பிளாட்டோ1 என்ற கிரேக்க ஞானி கூறிய ஒரு வாசகம் எனது ஞாபகத்திற்கு வருகிறது. ‘எந்த ஒரு வீட்டில் புத்தகசாலை இருக்கிறதோ அந்த வீட்டில் தான் ஆத்மா இருக்கிறது.’
அந்தக் காட்டுமிராண்டிகள் உபயோகித்த முரட்டு விவசாயக் கருவிகள் முதல் தற்கால நவீன விவசாயக் கருவிகள் வரை எல்லா வற்றையும் பார்த்தேன்.
இவைகளையெல்லாம் பார்க்கிறபோது, மனிதன் எவ்வாறு முன்னேற்ற மடைந்திருக்கிறா னென்பது நன்கு தெரிகிறது. மனிதன், எதுவரையில் தன் உழைப்போடு எண்ணத்தையும் கலக்க விட்டானோ, எது வரையில் இயற்கைச் சக்திகளோடு பங்கு கொண்டானோ, தனது சுற்றுப் புறத்தினால் ஏற்பட்ட சாதனங் களை எதுவரையில் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளக் கற்றுக் கொண்டானோ, பயத்தினின்று எது வரையில் விடுதலை யடைந்தானோ, எதுவரையில் தன்னம்பிக்கை கொண்டானோ, தெய்வ நம்பிக்கையை எது வரையில் இழந்தானோ அது வரையி லேயே அவன் - அந்த மனிதன் - முன்னேற்ற மடைந்திருக்கிறான்.
அதே சமயத்தில், இது வரையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித னுடைய மண்டை ஓடுகளை - பழைய காலத்து மண்டை ஓடுகளி லிருந்து சென்ற தலை முறையில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் வரை - எல்லா ஓடுகளையும் நான் பார்த்தேன். இந்த மண்டை ஓடுகளிலிருந்து உண்டான பொருள்களிடையே எவ்வளவு வித்தியாசங்கள் ஏற்பட்டனவோ அவ்வளவு வித்தியாசங்கள், இந்த மண்டையோடுகளுக் கிடையிலும் இருக்கின்றன. அப்பொழுது நானே எனக்குள் ‘ஓ! இவையெல்லாம் அறிவு அபி விருத்தியைப் பொறுத்த விஷயங்களே’ என்று சொல்லிக் கொண்டேன். ஆதிகாலத்துத் தெப்பத்துக்கும் தற்கால யுத்தக் கப்பலுக்கும், புராதன காலத்துத் தடிக்கும் நவீன க்ரூப் பீரங்கிக்கும், வெறும் மண் பூச்சாலான சித்திரத்திற்கும் இயற்கையான பூமியழகுக்கும், தம்பட்டத்திற்கும், நவீன இசைக் கருவிக்கும் எவ்வளவு வித்தி யாசங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு வித்தியாசங்கள் முற்கால மண்டையோடுகளுக்கும் தற்கால மண்டையோடுகளுக்கும் இருக் கின்றன. பழைய காலத்து மண்டை யோட்டில் மனிதனுடைய கீழான சுபாவங்கள் குடி கொண்டிருந்தன. தற்கால மண்டை யோடானது, சுகம், சுதந்திரம், அன்பு முதலியன குடி கொண்டுள்ள கோயிலாக விளங்குகிறது.
இவையெல்லாம் என்ன? மூளையைப் பொறுத்த விஷயம்; அறிவு அபிவிருத்தியைப் பொறுத்த விஷயம்.
நமது முன்னோர்களைவிட நாம், விடுபட்ட நிலைமைக் கருகாமையில் வந்திருக்கிறோ மென்று சொன்னால், அதற்குக் காரணம் நமக்கு அதிகமான மூளையும் அதற்குள் அதிகமான அறிவும் இருப்பது தான்.
இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். நான் எதை நம்புகிறேன் என்பதோ, நான் எதை ரூஜுப்படுத்த வேண்டு மென்று கூறுகிறே னென்பதோ முக்கிய விஷயமல்ல. உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள் என்றுதான் கூறுகிறேன். மத சம்பந்தமான துவேஷ எண்ணங்களை உங்கள் மனத்தினின்று ஒருகணத் திற்கு அகற்றி விடுங்கள். ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்து சில நிமிஷநேரம் நடந்து காட்டுங்கள்.
ஓர் அரசனோ அல்லது ஒரு புரோகிதனோ இருந்ததாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த அரசனோ அல்லது புரோகிதனோ பழைய காலத்துத் தெப்ப மொன்றில் ஏறிக்கொண்டு தம்பட்டத்தின் ஓசையை இன்னிசை யாகச் செவிமடுத்துக் கொண்டே பின்வருமாறு கூறுகிறாbன்று வைத்துக் கொள்ளுங்கள்:-
‘இந்தத் தெப்பந்தான், மனிதனால் நிர்மாணிக்கப்படக்கூடிய சிறந்த படகு. கடவுளால் அநுக்ரஹிக்கப் பட்ட மாதிரிப்படியே இந்தப் படகு கட்டப்பட்டிருக்கிறது. இதன் மீது ஒரு பாய் மரத்தைக் கட்டியோ அல்லது வேறு விதமாகவோ இதனை அபிவிருத்தி செய்ய முடியுமென்று எவனாவது சொன்னால் அவன் ஒரு நாஸ்திகன்; அவனைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்.’
அப்பொழுது, உலக அபிவிருத்தி எவ்வளவு தூரம் ஏற்பட் டிருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அப்படியே இன்னொரு தரம், ஓர் அரசனோ அல்லது புரோகிதனோ இருந்தானென்று வைத்துக் கொள்ளுங்கள். அநேக மாக ஒரு புரோகிதன் இருந்தானென்று வைத்துக் கொள்வதுதான் நல்லது. ஏனெனில் அஃது அறியாமை நிரம்பியிருந்த காலம். அந்த அரசனும் புரோகிதனும் சேர்ந்து பின்வருமாறு கூறுகிறார்களென்று வைத்துக் கொள்வோம்:-
‘தம்பட்டத்தைப் போன்றதோர் அற்புதமான கருவியை மனிதனால் எப்பொழுதும் சிருஷ்டிக்க முடியாது. இந்த மாதிரி வாத்தியத்தைத்தான் தேவலோகத்தில்கூட வைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஏதோ ஒரு தேவதை இந்த வாத்தியத்தை வாசித்துக் கொண்டே இதில் லயித்துப் போய், தன்னையுமறியாமல் இதனைத் தெய்வலோகத்திலிருந்து கீழே போட்டு விட்டது. பூலோகத்திற்கு இந்த வாத்தியம் கிடைத்தது இப்படித் தான். இந்தக் கருவியை எவனேனும் அபிவிருத்தி செய்ய முடியுமென்று சொன்னால் அவன் ஒரு கடவுள் துரோகி; அவனை மரண தண்டனைக்குட் படுத்த வேண்டும்.’
இப்படிச் சொல்லிவிட்டால், சங்கீதம் எவ்வளவு தூரம் வளர்ச்சி யடையும் என்று நினைக்கிறீர்கள்? இந்த வழியை நமது முன்னையோர்கள் பின்பற்றி யிருப்பார்களானால், இப்பொழுது நாம் பீத்ஹோவன்1 என்ற சங்கீதப் புலவனுடைய தெய்விக இசையைப் பருகிக்கொண்டிருக்க முடியுமா?
இப்படியே ஓர் அரசனோ அல்லது ஒரு புரோகிதனோ கூறுகிறாbன்று வைத்துக் கொள்வோம்:-
‘அந்தக் கோணலான தடியிருக்கிறதே அதுதான், இதுவரை யில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த உழுபடைச்சால். பக்திமானாகிய ஒரு விவசாயிக்கு இஃது அவனுடைய கனவில் அளிக்கப்பட்டது. இதை இன்னும் அதிகமாக அபிவிருத்தி செய்ய முடியுமென்று எவனேனும் சொன்னானாகில் அவன் ஒரு நாஸ்திகன்.’
இப்படிச் சொல்லி யிருந்தால், உலகத்தில் விவசாய அறிவு எவ்வளவு தூரம் அபிவிருத்தி யடைந்திருக்கு மென்று நீங்கள் கருதுகிறீர்கள்?
ஆனால் ஜனங்களும், அரசனும், புரோகிதனும் கூறினார்கள்:-
‘நமது சகோதர கிறிஸ்தவர்களைக் கொல்ல, நமக்கு இன்னும் சிறந்த கலப்பைகள், சிறந்த சங்கீதம், சிறந்த சித்திரங்கள் முதலியன தேவை. எவனொருவன் இந்தச் சிறந்தவைகளைக் கொடுத்து, வசிப்ப தற்கு நல்ல வீடும், உடுப்பதற்கு நல்ல உடையும் கொடுக்கிறானோ, அவனைச் செல்வத்தால் அலங்கரிப்போம்; கண்ணியமாகிற முடியைச் சூட்டுவோம்.’
மேலே சொன்ன இந்தக் கருவிகளை அபிவிருத்தி செய்ய எல்லா மனிதர்களுக்கும் எல்லா விதமான தூண்டுதல்களும் அளிக்கப்பட்டன. இந்தத் தூண்டுதல் இருந்ததனால்தான், குறுந்தடி யானது பெரிய பீரங்கியாகவும், சிறிய தெப்பம் பெரிய நீராவிக் கப்பலாகவும் அபிவிருத்தி யடைந்திருக்கின்றன. இதனால்தான், சாதாரணமான கரடு முரடாயுள்ள ஒரு பாறாங்கல், அழகிய ஓர் உருவச்சிலையாக அமைந்து விடுகிறது.
தெப்பத்திலே மிதந்து கொண்டு சென்றானே அந்த மனிதன், தம்பட்ட ஓசையைக் கேட்டுப் புளகாங்கித மடைந்தானே அந்த மனிதன், தன்னுடைய குறுந்தடியின் துணை கொண்டு நிலத்தை உழுது பயிரிட்டானே அந்த மனிதன், அவனுக்கும் ஒரு மதம் இருந்தது. அவன் வைதிகமாகவும் இருந்தான். அவனுக்குச் சந்தேக மென்பதே உதித்தது கிடையாது. அவன் மன நம்பிக்கையுடன் தான்வாழ்ந்தான்; அப்படியேதான் இறந்தான். அவன், நரகமென்ப தொன்றுண்டு என்று நம்பினான். அவனுடைய மத நம்பிக்கையில் யாரேனும் சந்தேகப்பட்டு அந்தச் சந்தேகத்தை வெளிப் படுத்துவார் களானால், அவர்களைத்தான் வெறுப்புடன் பார்ப்பதன் மூலம் தனக்கு மோட்சம் கிடைக்குமென்றும் அவன் நம்பினான்.
அப்படிப்பட்ட மனிதனுக்கு அறிவு நிரம்பிய சந்ததியார் பலர் ஏற்பட்டனர். இது விசனிக்கத்தக்கதுதான். ஆனால் இஃது உண்மை. புத்திசாலிகளைவிட மூடர்கள்தான் உலகத்திலே அதிவேகமாக அபிவிருத்தி யடைகிறார்களென்பதும் ஒரு துக்ககரமான உண்மை. மேலே சொன்ன அந்தப் பழைய காலத்து மனிதன் - அதாவது தெப்பத்திலே மிதந்து சென்றானே அவன் - பேய் பிசாசுகளிலும் நம்பிக்கை கொண்டிருந்தான். அவன் கற்பனை செய்து கொண்ட பேயானது, பிளவுபட்ட குளம்புகளை யுடையதாகவும், நீண்ட வாலுடையதாகவும், கூர்மையான பாணத்தைத் தாங்கியதாகவும் இருந்தது. கடவுளுக்குச் சமதையான அந்தஸ்திலேயே இந்தப் பேயும் இருக்கிற தென்றும், ஆனால் கடவுளைப் போல் அவ்வளவு பரும னுடையதல்லவென்றும், ஆனால் கடவுளை விட அதி புத்திசாலி யென்றும் அவன் கருதினான். இப்படிப்பட்ட பேயானது, சென்ற ஆறாயிர வருஷ காலமாக எந்த விதத்திலும் அபிவிருத்தியடைய வில்லை யென்பது உங்களுக்குத் தெரியுமா?
தெப்பத்திலே மிதந்து சென்ற அந்த மனிதன், கடவுளை ஒரு கொடுங் கோலனாகவே கருதிவந்தான். எந்த ஒரு மனிதன், தான் வகுத்துக் கொண்ட ஒரு லட்சியத்தின் படி நடந்து வருகிறானோ அவனுக்குச் சாசுவதமான நரகந்தான் கிடைக்குமென்று அவன் நம்பினான். உலகம் தட்டையா யிருக்கிறதென்று அவன் நம்பினான். நரக மென்பது, அக்கினி மயமாயிருக்கு மென்று அவன் நம்பினான். பலாத்காரத்தினால்தான் நியாயத்தை நிலை நிறுத்த முடியு மென்பதுவே, அரசியல் சம்பந்தமாக அவன் கொண்டிருந்த கொள்கை. உலகத்தில் இந்தக் கொள்கைமாற இன்னும் ஆயிரக் கணக்கான வருஷங்கள் பிடிக்குமென்று தோன்றுகிறது!
நான் கேட்பதெல்லாம் என்னவென்றால், அந்தப் பழைய காலத்து மனிதன், எப்படி தன் இசைக் கருவியைத் தம் பட்டத்தி லிருந்து அபிவிருத்தி செய்து கொண்டானோ, அப்படியே அவனுடைய தத்துவ ஞானத்தையும் அபிவிருத்தி செய்து கொள்ள இடங் கொடுங்கள் என்பது தான். தன்னுடைய தெப்பத்தை அவன் எப்படி பெரிய நீராவிக் கப்பலாக விருத்தி செய்து கொண்டானோ அப்படியே அவனுடைய அரசியலையும் அபிவிருத்தி செய்து கொள்ள இடங் கொடுங்கள் என்பதுதான். இவ்வளவு தான் நான் கேட்பது. மனிதனுடைய ஆத்மாவுக்கு எல்லா வழிகளிலும் சுதந்திரம் இருக்க வேண்டுமென்றுதான் நான் கோருகிறேன். இந்த ஒரு குற்றத்தைத்தான் நான் செய்திருக்கிறேன். நாம் சிந்தனை செய்வோம் என்பதுதான் என் வேண்டுகோள். ஒவ்வொருவனும் அவனவனுடைய எண்ணத்தை வெளியிடட்டும். நாம் புதிய விஷயங்களை ஆராய்ச்சி செய் கிறவர்களாக இருக்க வேண்டும். எப்பொழுதும் பிறரைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்களாகவோ, கெஞ்சுகிறவர்களாகவோ, மற்றவர்கள் எதிரில் ஊர்ந்து செல்கிற வர்களாகவோ இருக்க வேண்டாம். தேவலோகத்தில் எல்லையற்ற பரம்பொருளான கடவுள் ஒருவர் இருப்பாரானால், அவர், கோழை களின் வணக்கத்தையும், நயவஞ்சகர் களின் வணக்கத்தையும் ஏற்றுத் திருப்தி யடையவே மாட்டார். அவநம்பிக்கை கொள்கிறீர்களா, மனப் பூர்வமாக அவநம்பிக்கை கொள்ளுங்கள்; கடவுளிடத்தில் விசுவாசம் ஏற்பட வில்லை யென்று சொல் கிறீர்களா, அல்லது ‘நான் நாஸ்திகன்’ என்று சொல்கிறீர்களா அதைத் தைரியமாகவும் மனப் பூர்வமாகவும் சொல்லுங்கள். அப்படிச் சொல்வது தான் தெய்வ லோகத்தில் மணக்கும்; பக்தி யென்னும் போர்வையினால் மூடப் பெற்ற நயவஞ்சகம், அது வெளிப்பார்வைக்கு எத்தகைய சமயச் சார்புடையதா யிருந்தாலும், தெய்வலோகத்தில் துர்நாற்றத்தையே உண்டுபண்ணும்.
இதுதான் என் கோட்பாடு. உங்களுக்கென்று என்ன உரிமை கொண்டாடுகிறீர்களோ அதே உரிமையை எல்லா மனிதர்களுக்கும் வழங்குங்கள். இயற்கையின் சுபாவங்கள் உள்ளே புகுமாறு உங்கள் மனதைத் திறந்து வையுங்கள். புதிய எண்ணங்களுக்கு முகமன் கூறி வரவேற்புக் கொடுங்கள். அப்பொழுதுதான் நாம் முன்னேற முடியும்.
இன்றைய சமயவாதி, தனது ஆத்மாவாகிய கப்பலை, வைதிகம் என்னும் துறை முகத்தில் கட்டிப்போட்டு வெயிலிலே உலர்ந்து போகுமாறு விட்டு வைக்க விரும்புகிறான்; பழைய கொள்கைக ளாகிற பாய் மரத்தின் மீது, பழைய அபிப்பிராயங்களாகிற கப்பற் பாய் அடிபட்டு அலறும் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதிலே திருப்தி யடைகிறான். கப்பலின் இணைப்புகளும் பக்கங்களும் சந்துவிட்டு வெயிலியே காய்ந்து போவதைக் காண்பதிலே சந்தோஷம் கொள்கிறான். ‘நான்கொண்டிருக்கிற அபிப்பிராயங் களைக் கலைக்காதீர்கள்; என் மனதை நிலை குலைத்து விடாதீர்கள்; ஏற்கனவே நான் ஒரு வித அபிப்பிராயங் கொண்டு விட்டேன்; எனக்கு நாஸ்திக வாதம் வேண்டாம். நான் பின்னோக்கிப் போவேனே தவிர, முன்னோக்கிச் செல்ல மாட்டேன்’ என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பதில்தான் அவன் இன்பம் நுகர்கிறான்.
என்னைப் பொறுத்த மட்டில், பரந்த சமுத்திரத்தில் செல்ல வேண்டுமென்றுதான் விழைகிறேன். காற்று, அலை, நட்சத்திரம் முதலிய வற்றோடு என் அதிர்ஷ்டத்தையும் பிணைத்துக் கொண்டு போகவே விரும்புகிறேன். புயற் காற்றுடன், பெருமையாகவும் புகழோடும் நான் அடித்துக்கொண்டு போகப்படுவதில் திருப்தி யடைவேனே தவிர, வைதிக மென்னும்துறை முகத்தில் சீரழிந்து கிடக்க மாட்டேன்.
எப்படியும், யுகத்திற்கு யுகம் நாம் முன்னேறிக் கொண் டிருக்கிறோம். இப்பொழுது இந்த நாட்டிலேயுள்ள பரம வைதிகர் களாயிருக்கப் பட்டவர்கள் இருநூறு வருஷத்திற்கு முன் வாழ்ந் திருந்தார்களானால், அவர்களை வேதப் புரட்டர்களென்று சொல்லித் தீயிட்டுக் கொளுத்தி யிருப்பார்கள். இப்பொழுது நான் வெளியிடும் இந்த எண்ணங்களை எந்தப் பாதிரிமார்கள் கண்டிக் கிறார்களோ, அதே பாதிரிமார்கள் அப்பொழுது குற்ற விசாரணைக் குட்பட்டிருப்பார்கள். எந்த இடத்தில் முன்னேற்றச் சேனையானது தங்கி நெருப்புப் போட்டுக் குளிர் காய்ந்ததோ அதே இடத்தில் தேவாலயத்தின் பலி பீடங்கள் இப்பொழுது இருக்கின்றன. நூறு வருஷத்திற்கு முன்னால் நாஸ்திகர்கள் எந்த ஸ்தானத்தில் இருந்தார் களோ அதே இடத்தில்தான், இன்றைய சமயவாதிகள் இருக்கி றார்கள். தெய்வ சபை - அதாவது ஆலய ஸ்தாபனம் - தன்னையும் மீறி முன்னேறிக் கொண்டு வந்திருக்கிறது. கண்டனஞ் செய்து கொண்டும், தூஷித்துக் கொண்டும், அது, மேற்படி முன்னேற்றச் சேனையைப் பின் தொடர்ந்தே வந்திருக்கிறது. அந்த முன்னேற்றச் சேனைக்குச் சிறிது எட்டிய தூரத்திலேயே அஃது இருந்துகொண்டு வர வேண்டியிருக்கிறது. அப்படி இந்தத் தெய்வசபையானது, முன்னேற்றமடைந்திராவிட்டால் நான் இப்பொழுது என் எண்ணங் களை வெளியிட்டிருக்க முடியாது.
மனிதன் எந்த அளவுக்குத்தன் உழைப்புச் சக்தியோடு எண்ணத்தின் சக்தியையும் கலந்துவிட்டிருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் முன்னேற்றமடைந்திருக்கிறான். ஒரு கப்பல் மாலுமி, காற்றையும் அலையையும் கட்டுப் படுத்தத் தெரியாமல், சமுத்திரத்தின் சுழல்களையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தானாகில், அவனை மூடநம்பிக்கை கொண்டவன் என்று தான் சொல்ல வேண்டும். விவசாயியின் நிலைமையும் இப்படித்தான். அவனுடைய வாழ்வெல்லாம், அவனால் கட்டுப்படுத்தமுடியாத ஒன்றைப் பொறுத்திருக்கிறது. ஆனால் ஒரு யந்திரத்தில் வேலை செய்கிறவன் அப்படியல்ல. தான் வேலை செய்யும் யந்திரத்தில் ஏதேனும் ஒரு சக்கரம் சரியாக ஓடவில்லை யென்றால் அதற்காக அவன் தெய்வ சக்தியின் துணைநாடி முழந்தாளிட்டுப் பிரார்த்தனை செய்வதில்லை. சக்கரம் ஓடாமலிருப்பதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும். தன்னுடைய யந்திரத்தில் ஏதோ கோளாறு இருக்கிறதென்பதை அவன் தெரிந்து கொண்டிருக்கிறான். ஓடாத சக்கரம் ஓடுகிறவரை, அவன் சிறியதைப் பெரிதாக்கியோ பெரியதைச் சிறிதாக்கியோ ஏதோ ஒன்றைச் செய்கிறான். அதுபோலவே, மனிதனும் எவ்வளவுக் கெவ்வளவு, தனது சுற்றுப்புறத் திற்கு அடிமையாகாமலிருக்கிறானோ, எவ்வளவுக் கெவ்வளவு பஞ்ச பூதங்களின் சுபாவத்திற்கு வசப்படாமலிருக் கிறானோ அவ்வளவுக் கவ்வளவு அவன், தன் விதி நியமத்தையும் கட்டுப்படுத்திக் கொண்ட வனாகிறான். இயற்கையால் ஏற்படும் முட்டுக் கட்டைகளை எந்த அளவுக்குச் சமாளிக்கிறானோ அந்த அளவுக்கு தேக பலத்திலும் அறிவு வளர்ச்சியிலும் முன்னேற்ற மடைந்தவனாகிறான். மனிதன் வளர வளர, அவன், தனது சுய உரிமைகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கிறான். அப்பொழுது சுதந்திரம் என்பது ஒரு கம்பீரமான பொருளாகவும் தெய்விகப் பொருளாகவும் அவனுக்கு ஆகிவிடுகிறது. அப்பொழுது, அவன் தன்னுடைய சுய உரிமைக்கு எவ்வளவு மதிப்புக்கொடுக்கிறானோ அவ்வளவு மதிப்பு பிறருடைய உரிமைக்கும் கொடுக்க ஆரம்பிக் கிறான். எப்பொழுது எல்லா மனிதர்களும் தங்களுக்கிருக்கும் உரிமைகளைப்போல் மற்றெல்லாருக்கும் இருக்க வேண்டுமென்று கருதத் தொடங்கி விடுகிறார்களோ அப்பொழுது இந்த உலகம் நாகரிக மடைந்த தாகிவிடும்.
சில வருஷங்களுக்கு முன்னால் வரை, ஜனங்கள், அரச னிடமோ, புரோகிதனிடமோ எதிர்த்துப் பேச பயந்தார்கள். ஒரு சமயக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், ஒரு நூலை மறுக்கவும், ஒரு கோட்பாட்டைக் கண்டிக்கவும், தர்க்கரீதியாகப் பேசவும், சுயமாகச் சிந்திக்கவும் பயந்தார்கள். செல்வத்திற்கு முன்னே தலை குனிந்தார்கள். பட்டங்களுக்கு முன்னே பணிந்தார்கள். ஆனால் இவையெல்லாம் இப்பொழுது மெது மெதுவாக, ஆனால் நிச்சயமாக மாறிக் கொண்டு வருகின்றன. பணக்காரன் என்ற காரணத்திற்காக ஒரு மனிதனை நாம் இப்பொழுது வணங்குவ தில்லை.
இப்பொழுது, மனிதனுடைய ஆவலானது அரச பதவியையோ சக்ரவர்த்திப் பதவியையோ அடைவதில் திருப்தி பெறுவதில்லை. பிரெஞ்சு ராஜாங்கத்தின் சக்ரவர்த்தியாக இருந்து விடுவதோடு மட்டும் (கடைசி) நெப்போலியன் திருப்தி யடையவில்லை தன் தலையில் பொற் கிரீடம் தரித்திருந்ததினாலும் அவன் திருப்தி யடையவில்லை. தன் தலைக்குள் ஏதோ மதிப்புப் பெறக்கூடிய ஒன்று இருக்கிறதென்று நிரூபிக்க அவன் ஆசை கொண்டான். பிரெஞ்சு அறிவுக்கழகத்தில் ஓர் அங்கத்தினனாக வேண்டுமென்பது அவன் விருப்பம். எனவே ஜூலியஸ் சீஸரைப்1 பற்றி ஒரு சரித்திரம் எழுதினான். சக்ரவர்த்திகள், அரசர்கள், போப்பாண்டவர்கள் முதலியோர், மற்ற மனிதர்களை விட உயர்ந்தவர்களல்லர். வில்லியம்2 மன்னனையும் ஹெக்கல்3 என்ற தத்துவ ஞானியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அரசன், மிக மேன்மையானவர்கள் என்று கருதப்படுகிறவர் களால் (புரோகிதர்களால்) அபிஷேகம் செய்யப் படுகிறவன். அவனுடைய சிரசின் மீது அதிகாரமென்னும் தெய்விக (பெட்ரோல்) எண்ணெயை அபிஷேகம் செய்கிறார்கள். இப்படிப் பட்ட அரசனுடைய ஹெக்கலை ஒப்பிட்டுப் பாருங்கள். முடிதரித்த அந்தச் சாதாரண மனிதனுக்கு மேலே, அந்தப் புலவன் எப்படி ஞான விராட்ஸ்வரூபனாக விளங்குகிறான்!
அறிவுக்கும், திறமைக்கும் தூய மனத்திற்கும் இப்பொழுது உலகம் வணக்கஞ் செலுத்த ஆரம்பித்திருக்கிறது.
நாம் முன்னேறி யிருக்கிறோம். புனிதமான, வீரம் நிறைந்த ஒவ்வொரு தியாகத்தினுடைய தெய்வத்தன்மை பொருந்திய, வீரம் செறிந்த ஒவ்வொரு செயலினுடைய சாதகத்தை நாம் அடைந்திருக் கிறோம். சாதகம் நிறைந்த இந்த வெளிச்சத்திற்கு, செறிவும் புகழும் நிறைந்த இந்த வெளிச்சத்திற்கு இன்னும் சிறிது சேர்த்து, அடுத்த தலைமுறையினருக்கு இதனை நாம் வழங்க வேண்டும்.
இந்த உலகம் எவ்வளவு துன்பத்தை அநுபவித்திருக்கிறது? நமது மூதாதையர்கள் எவ்வளவு காலம் அடிமைகளாயிருந்திருக் கிறார்கள்? சிங்காதனத்தின் அடியிலும், தேவாலய பலி பீடத்தின் புழுதியிலும் எப்படி கெஞ்சியும் பணிந்தும் கிடந்தார்கள்? அவர்கள் தங்களை எப்படி இழிவு படுத்திக் கொண்டார்கள்? அலங்கார உடையும் முடியும் தரித்த மூட நம்பிக்கையின் சந்நிதானத்தில் அவர்கள் எப்படித் தங்களைத் தாழ்வு படுத்திக் கொண்டு நின்றார்கள்? இவைகளைப் பற்றியெல்லாம் நினைக்கிறபோது, நான் ஆச்சரியமே அடைகிறேன்.
ஐம்பது வருஷ காலத்திற்கு முன்னர் வரை, மனிதர் வசிக்க லாயக்கில்லாதபடி இந்த உலகம் இருந்தது. கிரேட் பிரிட்டன், 1808ஆம் வருஷம் வரை அடிமை வியாபாரத்தை ஒழிக்கவில்லை. அதுவரை யில் அந்த நாட்டின் நீதிபதிகள், நியாய மன்றத்தில் உட்கார்ந்து கொண்டு நீதியின் பெயரால், அந்த நாட்டின் பாதிரிமார்கள் பிரசங்க மேடையின் மீது அமர்ந்து விசுவப் பிரேமையின் பெயரால், அடிமை வியாபாரத்திலிருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு ஆடம்பர வாழ்க்கையை நடத்தினார்கள். அதுவரையில் - 1808ஆம் வருஷம் வரையில் - அமெரிக்கா, பிற நாடு களுடன் அடிமை வியாபாரம் செய்வதை நிறுத்தவில்லை. பிறகு அமெரிக்காவுக்குள்ளேயே ஒரு மாகாணத்திற்கும் மற்றொரு மாகாணத்திற்கும் இந்த வியாபாரம் நடந்து வரலாமென்ற வழக்கத்தை மட்டும் அநுஷ்டித்து வந்தது. மனிதர்கள், அடிமைகளாக நடத்தப்படும் வழக்கம் தனது குடியேற்ற நாடுகளில் இருக்கக் கூடாதென்று கிரேட் பிரிட்டன் 1833ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 28ந் தேதி யன்றுதான் தீர்மானித்தது. 1863ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி அப்ரஹாம் லிங்கன்1 அமெரிக்காவின் அடிமை வியாபாரத்தை அடியோடு ஒழித்து அமெரிக்காவின் தேசீயக் கொடியை, எந்த ஆகாசத்தில் அது பறக்கிறதோ அந்த ஆகாசத்தைப் போல் தூய்மைப் படுத்தினான்.
அமெரிக்காவின் பிரசிடெண்டுகளாயிருந்தவர்களில் அப்ரஹாம் லிங்கன்தான் தலைசிறந்தவன் என்பது என்னுடைய அபிப்பிராயம். அவனுடைய ஞாபகச் சின்னத்தின் மீது கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதவேண்டும்:-
‘சர்வாதிகாரத்தைப் பெற்றிருந்தும், அதைக் கருணைக்காகத் தவிர வேறு விதங்களில் துஷ்பிரயோகப் படுத்தாத ஒரு மனிதன், உலக சரித்திரத்திலேயே இவன் ஒருவன்தான். அப்படிப்பட்டவன் இதோ இங்கு நித்திரை செய்கிறான்.’
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அடிமை வழக்கத்தை எவ்வளவு காலம் வரை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தோம்? உழைத்த உழைப்புக்குத் திறந்த முதுகின் மீது சவுக்கடி கொடுப்பதுவே சட்ட ரீதியான முத்திரை யென்று எவ்வளவு காலம் அங்கீகரித்துக் கொண்டிருந்தோம்? இந்த நாட்டின் பிரசங்க பீடமானது (புரோகிதக் கூட்டமானது) வேண்டுமென்றே, இஷ்டப்பட்டே நூறு வருஷம் வரை கிறிஸ்து நாதரின் சிலுவையை, சவுக்கடி கொடுக்கும் ஸ்தம்ப மாக மாற்றி வைத்தது என்பதைச் சிறிது நினைத்துப் பாருங்கள்.
எனது தேகத்திலுள்ள ஒவ்வொரு துளி ரத்தமும் எந்தவிதமான கொடுங் கோன்மையையும் எந்த விதமான அடிமைத் தனத்தையும் சபிக்கிறது; அதனைத் துவேஷிக்கிறது. பிறர் அதிகாரஞ் செய்து கற்பிப்பதை நான் துவேஷிக்கிறேன். சுதந்திரத்தை நான் விரும்பு கிறேன்.
சுதந்திரம் என்றால் நான் எதைக் கூறுகிறேன்? தேக சம்பந்தப் பட்ட சுதந்திரம் என்று சொன்னால் பிறர் சந்தோஷத்திற்குப் பாதகம் ஏற்படாதபடி நான் எதைச் செய்யவும் எனக்கு உரிமை வேண்டும். அது தான் நான் கோரும் தேக சம்பந்தப்பட்ட சுதந்திரம். அறிவு சம்பந்தப்பட்ட சுதந்திரம் என்று சொன்னால் சரியாக நினைக்கும் சுதந்திரமும், தவறாக நினைக்கும் சுதந்திரமும் எனக்கு வேண்டும். சத்தியத்தை அடைவதற்குச் சாதனமா யிருப்பது சிந்தனை. ஏற்கனவே, நமக்குச் சத்தியம் இன்னதென்று தெரிந் திருந்தால், நாம் சிந்திக்க வேண்டிய அவசியமேயில்லை. தேவையான தெல்லாம் நமது எண்ணத்திலே தூய்மையிருக்க வேண்டுமென்பதுதான். ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் என் அபிப்பிராயத்தைக் கேட்கி றீர்கள். அதை நான் பரிசோதித்துப் பார்க்கிறேன். பிறகு நான் என்ன செல்வது? நான் அந்த விஷயத்தைப் பற்றி என்ன எண்ணுகிறேனோ அதைச் சொல்ல வேண்டாமா? என்னிடத்தில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்து அது தெய்வ கிருபையினால் அருளப்பட்டதென்று சொல்கிறார்களென்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதை நான் நம்பவில்லை. நம்பவில்லை யென்றுதானே நான் சொல்ல வேண்டும்? என் மனதிலிருப்பதை நான் தைரியமாக எடுத்துச் சொல்லத் தேவை யில்லையா? அப்படியில்லாமல், நான் ஒரு நய வஞ்சகனாகி, எதை என் மனம் ஒப்புக் கொள்ளவில்லையோ அதை ஒப்புக் கொண்டு விட்டதாகக் கூறி, பணிந்து போகக் கூடிய ஒரு கோழையாக என்னை ஆக்கிக் கொள்வது நல்லதா? மனதில் பட்டதைச் சொல்லும் மனிதத் தன்மையைத் தான் விரும்புகிறேன். என்னைப் பொறுத்தமட்டில், மனிதத் தன்மையில்லாத ஆஸ்திகனை விட, மனித்தன்மையோடு கூடிய நாஸ்திகனாகவே நான் இருக்கப் பிரியப்படுவேன். கடைசி தீர்பபு நாளென்று ஒன்று இருக்கு மாயின், அப்பொழுது எல்லோரும் ஒரு பரம் பொருளின் முன்னிலையில் போய் நிற்பார்களாயின், தான் நம்பாத ஒன்றை நம்புவதாகப் பாசாங்கு செய்து கொண்டு பதுங்கி பதுங்கி வாழ்கிறானே அவனைக் காட்டிலும் நான் சிறிது தலைதூக்கியே நிற்பேன். என் கட்சிக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கிடைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பமும் எனக்கு உண்டாகும்.
நான் சொல்ல வேண்டியதைச் சொல்வதாகவே தீர்மானித்து விட்டேன். ஆனால் அதை அன்பாகவும் தெளிவாகவும் சொல்வேன்; சொல்லியே தீர்வேன். இப்படி நான் சொல்வதை அங்கீகரிக் கிறவர்கள் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை வெளியிலெடுத்துச் சொல்லும் நிலைமையில் இல்லை. அவர்களிற் பலர் ஏழைகள்; இன்னுஞ் சிலர் வியாபாரிகள். தாங்கள் எதை உண்மையாக நினைக்கிறார்களோ அதை வெளியிலே சொன்னால், தங்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள், தங்களோடு யாரும் வியாபராஞ் செய்யமாட்டார்கள் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்கள், தங்கள் குழந்தை களுக்கு ஆகாரம் தேடிக் கொடுக்க வேண்டியிருக்கிறது; தங்கள் மனைவிமார்களைக் காப்பாற்ற வேண்டுமென்று அவர்கள் விரும்பு கிறார்கள்; வீடு வாசலோடு, வாழ்க்கையின் சௌகரியங்களை அநுபவிக்க வேண்டுமென்பது அவர்கள் ஆவல். அப்படிப்பட்ட ஒவ்வொரு மனிதனும், அவன் எந்த சமுதாயத்தில் வசிக்கிறானோ அந்தச் சமுதாயத்தின் இழிதகைமைக்கு ஒரு ‘சர்டிபிகேட்’ மாதிரி. ஆனால், இவர்கள் தங்கள் எண்ணங்களை வெளியிட்டுச் சொல்ல வில்லையே யென்பதற்காக இவர்களை நான் குறை கூறவில்லை. இவர்களுக்கு நான் என்ன சொல்கிறே னென்றால் ‘உங்களுடைய அபிப்பிராயங்களை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ அவர்களுக்கு உணவும் உடையும் அளியுங்கள். உங்களுக்காக நான் பேசுகிறேன். தெய்வத் திருச்சபை யானது, என்னைத் தீண்டாது; என்னை நசுக்காது; என்னைப் பட்டினி போடாது; என்னைத் தடைப்படுத்தவுஞ் செய்யாது. உங்க ளுடைய எண்ணங்களை நான் வெளியிடுகிறேன்’ என்பதுதான்.
கொடுங் கோலாதிக்கத்திற்கு மன்னிப்புக் கேட்பது போல், அடிமை வழக்கத்திற்குச் சமாதானம் கூறுவது போல், தெய்வத் திருச் சபையானது ‘மனிதன் நீச குணமுடையவன்’ என்ற போதனையைப் போதித்து வந்திருக்கிறது.இந்தத் தத்துவத்திற்கு ஆதாரமாக மேற்படி தெய்வத் திருச் சபையானது ஒரே ஓர் ஆதாரத்தைத்தான் எடுத்துக் காட்டி யிருக்கிறது. உண்மையென்ன வென்றால், மனிதர்களாகிய நாம் நல்லவர்களாகவும் இருக்கிறோம்; கெட்டவர்களாகவும் இருக்கிறோம். மனிதர்களிலே கேவல மானவர்கள், சில நல்ல காரியங்களைச் செய்யக் கூடியவர்களாகவும், மேலானவர்கள் சில கெட்ட காரியங்களைச் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். கீழானவர்கள் மேலுக்கு உயரலாம்; மேலானவர்கள் கீழே விழலாம். மானிட சமூகத்தை, பாவிகளென்றும் ஞானிகளென்றும் இரண்டு பெரும் பகுதியினராகப் பிரிக்கலாம் என்று சொல்வது சுத்த அபத்தமாகும் பெரிய ஆபத்துகள் ஏற்படுகிறபொழுது - பெண்களே அப்படி ஆபத்தேற்பட்டு விட்டதென்று ஏக்கத்துடன் கூறுவதா யிருக்கலாம் - எந்த மனிதர்களை, தெய்வத் திருச் சபையானது இழிகுணம் வாய்ந்தவர்கள் என்று கூறியதோ அதே மனிதர்கள், ஒரு திருவிழாவுக்கு உற்சாகத்துடன் செல்கிறமாதிரி, மரணத்தை நோக்கிச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களால், தன்னலத்தியாகமும், அசாதாரண துணிச்சலும் நிறைந்த பல காரியங்கள் செய்யப்படு கின்றன. அவர்களை லட்சக்கணக்கான மக்கள் வியந்து பாராட்டு கிறார்கள்; அவர்களுக்குத் தங்கள் கண்ணீரையே காணிக்கை யாகச் செலுத்துகிறார்கள். எல்லா மதங்களுக்கும் மேலே அந்தத் தெய்விக வஸ்து ஒன்று இருக்கிறது. அதுதான் மானிட சமுதாயம். இந்த மானிட சமுதாயம். என்னும் பரந்த கோஷமிடுகிற கடலிலே, எப்பொழுதேனும் ஒவ்வொரு சமயம் கப்பலானது கரையிலோ கற்பாறையிலோ மோதுவதுண்டுதான். அந்தச் சமயம் பார்த்து அக்கினி மயமான பாம்புகள் சீறவும் கூடும். அப்பொழுது ஒரு விசாலமான ஹிருதயம், ஒரு வீர ஆத்மா, நட்சத்திரம் போல் பிரகாசமுடைய ஒரு வீரச் செயலைச் செய்து விட்டுப் போகும். அந்த வேளையில்தான் மூடக் கொள்கைகளெல்லாம் பொய்ப்பட்டு போகின்றன. மானிட சமுதாயத்தை இழிவுபடுத்தவும் அடிமைப் படுத்தவுமே பயங்கரமான இந்த மூடக் கொள்கைகளெல்லாம் உபயோகிக்கப் பட்டிருக்கின்றன.
ஆத்மாவினின்று, சுதந்திரத்தையும் நியாய புத்தியையும்பிரித்து எடுத்துவிடுகிற மதக் கோட்பாடுகளை, நூல்களை, உருவங்களை, சட்டங்களை, மதங்களை, எல்லாவற்றையும் விலக்கி விடுங்கள். சிந்தனை செய்வது ஆபத்து என்கிற அபிப்பிராயத்தை அடியோடு நசுக்குங்கள். ஒரு மனிதன், மற்றொரு மனிதனுடைய ஆஸ்தியாக இருக்க முடியுமென்ற அந்தக் களங்கம் நிறைந்த கொள்கையை அழித்துப் போடுங்கள். நமது மனதுக்கு விலங்குபோடும் முயற்சியைக் கோபத்தோடு கண்டிப்போமாக. கடவுள் இல்லையானால், அதற்காக நாம் பணிந்து போவதோ, பல்லிளிப்பதோ, ஊர்ந்து செல்வதோ கூடாது. கடவுள் உண்டானால், இந்த உலகத்தில் அடிமைகளே இருக்கக்கூடாது.
ஸ்திரீ சுதந்திரம்
ஸ்திரீகள், அடிமைகளுக்கு அடிமைகளாயிருந்திருக்கிறார்கள். என்னுடைய அபிப்பிராயத்தில், ஸ்திரீகள், கேவலமான அடிமைத் தனத்திலிருந்து, விவாகம் செய்து கொள்ளக் கூடிய சுதந்திர நிலைமைக்கு வர எத்தனையோ லட்சக்கணக்கான வருஷங்கள் பிடித்திருக்க வேண்டும். மானிட சமுதாயத்திலேயே மிகவும் புனித மான சடங்கு விவாகந்தான் என்பதை இங்கே தெளிவுபடுத்திச் சொல்ல விரும்புகிறேன். அடுப்பங்கரை யின்றி, மானிட சமுதாயத் தின் முன்னேற்ற மில்லை; குடும்பச் சுற்றமின்றி, வாழ்க்கையும் பிரயோஜனப்பட்ட தாகாது. அநேக நல்ல குடும்பங்கள் சேர்ந்தது தான் ஒரு நல்ல அரசாங்கம். ஒரு நல்ல அரசாங்கத்தின் கிளையாக இருப்பது குடும்பம். இந்தக் குடும்பத்தைச் சீரழிக்கச் செய்யப்படுகிற எந்த முயற்சியும் பேய்த் தன்மை வாய்ந்தது; களங்க முடையது. எனக்கு விவாக வழக்கத்திலே நம்பிக்கையுண்டு. இந்த மணச் சடங்கை - விவாக மென்னும் ஸ்தாபனத்தை - தூஷிக்கிற நீண்ட கேசமுள்ள புருஷர்களுடையவும் குறைந்த கூந்தலுடைய ஸ்திரீகளி னுடையவும் அபிப்பிராயங்களை நான் கேவலமாகக் கருதுகிறேன்.
மனிதனுக்கு ஏதேனும் உயர்ந்த ஆசையொன்று இருக்கு மானால் அஃது என்ன? ‘யாரேனும் உயர்தன்மை வாய்ந்ததொரு ஸ்திரீயின் காதலைப் பெறக்கூடியவாறு என் இருதயத்தை விசாலப் படுத்திக் கொண்டு அறிவை விருத்தி செய்து கொண்டும் வாழ்க்கையை நடத்த வேண்டும்’ என்பதுதான் அந்த ஆசை. அப்படியே ஒரு பெண்ணின் உயர்ந்த ஆசையும், யாரேனும் ஒரு புருஷனுடைய அன்பையும் மதிப்பையும் பெற்று வாழவேண்டு மென்பதுதான். இதுவே என்னுடைய அபிப்பிராயம். காதலும் விவாகமும் இல்லாமல், வாழ்க்கையில் வெற்றியென்பதே கிடையாது. உலகமெல்லாம் கட்டியாளும் ஓர் அரசனாயிருப்பதைக் காட்டிலும், நீ - ஆண் மகனாகிய நீ - ஒரு ஸ்திரியின் மென்மையான, அன்பு நிறைந்த ஹிருதயத்தின் சக்ரவர்த்தியா யிருப்பது மேல். அப்படியே அவளும் - அந்த ஸ்திரீயும் - உன் ஹிருதயத்தின் சக்ரவர்த்தினியா யிருப்பதே சிலாக்கியமாகும். ஒரு நல்ல ஸ்திரீயின் பூரண அன்பை ஒருவன் இந்த உலகத்தில் பெற்று விட்டானாகில், அவன் சாக்கடையில் பிச்சைக் காரனாக மரித்தாலும் பாதகமில்லை; அவன் வாழ்க்கை வெற்றி யடைந்து விட்டதென்றுதான் நான் கூறுவேன்.
ஸ்திரீகள் கேவலமான அடிமைத் தனத்திலிருந்து, விவாகம் செய்து கொள்ளக் கூடிய நிலைமைக்கு வர, லட்சக்கணக்கான வருஷங்கள் பிடித்தனவென்று ஏற்கனவே நான் கூறினேன். சகோதரி களே! உங்கள் தேகத்தின் மீது நீங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள், தாய்மார்களின் அன்புத்தளைகளாகும். உங்கள் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஆபரணங்களும், அன்புக் கரங்களால் அணிவிக்கப் பெற்ற கங்கணங்களும், நாகரிகமென்னும் மாத்திரைக் கோலால், இரும்பிலிருந்து பிரகார மயமான தங்கமாக மாறியிருக்கின்றன.
ஆனால், ஒவ்வொரு மதமும், உலகத்தில் நிலவுகின்ற எல்லாப் பேய்க் குணங்களுக்கும் காரணம் ஸ்திரீகள் இழைக்கிற குற்றமே யென்று கூறியிருக்கிறது. எவ்வளவு வீரத்தனமான செய்தி இது? இஃது உண்மையாயிருக்குமானால், நான், துன்பம் நிறைந்த ஓர் உலகத்தில், என்னால் நேசிக்கப்படுகிற ஒரு ஸ்திரீயுடன் வசிப்பேனே தவிர, வேறொருவரு மில்லாமல் ஆண்கள் மட்டும் நிறைந்துள்ள தெய்வலோகத்தில் வசிப்பதை விரும்ப மாட்டேன்.
நான் ஒரு புஸ்தகத்தில் படித்தேன் - அதனுடைய நேரான வாசகத்தை இங்கு நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல முடியா விட்டாலும் அதன் கருத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். - கடவுள், ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்து இந்த உலகத்தைச் சிருஷ்டித்து அதில் ஒரு மனிதனையும் சிருஷ்டித்தாராம். அந்த மனிதனை ஒரு தோட்டத்தில் விட்டு வைத்தார். அவன், சிறிது நேரத்திற்கெல்லாம் தனது தனிமையை உணர்ந்தான். ஏதோ ஒரு வண்டியில் ஏறிச் செல்வதற்குக் காத்துக் கொண்டிருப்பது போல் அவன் அங்குமிங்குமாகத் திரிந்து கொண்டிருந்தான். அவனுக்குச் சுவை தரத்தக்க எதுவும் அங்கு அகப்பட வில்லை. செய்தியா, பத்திரிகையா, அரசியலா, கொள்கையா ஒன்றும் அங்கு இல்லை. அங்கு இன்னும் சாத்தான் ஆஜராகவில்லையாதலினால் அதனோடு சமரஸம் செய்து கொள்ளவும் அவனால் முடியவில்லை. உத்தியோகச் சீர்திருத்தம் கூடச் செய்ய முடியவில்லை. இந்த மாதிரியான நிலைமையில், அந்த மனிதன் தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந் தான். கடவுள் பார்த்தார். இந்த மனிதனுக்கு ஒரு துணையைத் தேடித்தர வேண்டுமென்று தீர்மானித்தார்.
ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்து இந்த உலகத்தையும் மனிதனையும் ஏற்கனவே அவர் சிருஷ்டித்து விட்டாராதலின், இந்த மனிதனிடமிருந்து ஒரு ஸ்திரீயைச் சிருஷ்டிக்க வேண்டியதாயிற்று. எனவே அந்த மனிதனைத் தூங்கும்படி செய்தார். அவனுடைய விலா எலும்பொன்றை எடுத்து அதிலிருந்து ஒரு ஸ்திரீயை சிருஷ்டித்தார் - இங்கே ஒரு வார்த்தை. இந்தக் கதையை நான் நம்புவதாக நீங்கள் கருத வேண்டாம். - இங்ஙனம் ஒரு பெண்ணைச் சிருஷ்டித்து அந்த மனிதனிடத்திலே கொண்டு விட்டார். அந்த ஸ்திரீ, அந்த மனிதனை எப்படி விரும்புகிறாளென்று பார்ப்பதற்காக வல்ல; அந்த மனிதன் அந்த ஸ்திரீயை எப்படி விரும்புகிறானென்று பார்ப்பதற்காக. அந்த மனிதனும் அவளை விரும்பினான். இரண்டு பேரும் குடும்பம் நடத்தத் தொடங்கினார்கள். ஒரே ஒரு காரியம் தவிர மற்றெல்லாக் காரியங்களையும் செய்யலா மென்றும் அவர் களுக்குக் கூறப்பட்டது. ஆனால் அவர்கள், எதைச் செய்ய வேண்டா மென்று சொல்லப்பட்டார்களோ அதைச் செய்தார்கள். நானும் பதினைந்து நிமிஷத்திற்குள் அப்படியே செய்திருப்பேன். அன்றி லிருந்து அவர்கள் வசித்த தோட்டத்தில் ஓர் ஆப்பில் பழம் கூட இல்லை. உடனே அவர்கள் தோட்டத்தினின்று அப்புறப்படுத்தப் பட்டார்கள். அவர்கள் தோட்டத்திற்குள் திரும்பி வராதபடி சில போலீஸ்காரர்களும் பாதுகாவலாக வைக்கப் பட்டார்கள். உடனே பேய்த்தன்மை, உலகில் பரவத் தொடங்கியது. அம்மை, கக்குவாய், இருமல், ஜுரம் முதலியனவெல்லாம் ஒன்றன் பின்னொன்றாக ஆரம்பித்தன. மனிதனுக்குப் பல்வலி ஏற்பட்டது; ரோஜா புஷ்பங் களுக்கு முள்ளும், பாம்புக்கு விஷமும் உண்டாயின. மத விஷயத் திலும் அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டன. அது முதற் கொண்டு இது வரையில் உலகத்தில் தொந்திரவுகள் ஏற்பட்ட வண்ணமா யிருக்கின்றன.
உலகத்தில் துன்பம் நிறைந்திருந்த தென்பதற்கு அத்தாட்சியாக எல்லா மதங்களும் இந்த மாதிரியான கட்டுக் கதைகளையே கட்டி விட்டிருக்கின்றன.
இதே சம்பவத்தைப் பற்றிக் கூறும் வேறொரு புஸ்தகத்தையும் நான் படித்தேன். முதலிற் சொன்ன புஸ்தகத்திற்கு நாலாயிரம் வருஷங்களுக்கு முந்தியே இஃது எழுதப்பட்டதாம். பிந்திய புஸ்தகந்தான் அசலென்றும், முந்திய புஸ்தகம் நகலென்றும் இந்தப் புஸ்தகங்களுக்கு வியாக்கியானஞ் செய்திருக்கிற எல்லா வியாக்கியான கர்த்தர்களும் கூறுகிறார்கள். இந்த நாலாயிர ஐயாயிர வருஷ வித்தியாசத்தை ஒரு பொருட்டாக மதித்து, உங்கள் மதக் கோட்பாடுகளைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்தஇரண்டாவது புஸ்தகத்திலுள்ள கதைப் பிரகாரம், ப்ரஹ்மா, இந்த உலகத்தையும் அதில் ஓர் ஆணையும் பெண்ணையும் சிருஷ்டிக்கத் தீர்மானித்து விட்டார். அப்படியே சிருஷ்டித்து, இந்த ஆணையும் பெண்ணையும் இலங்கையில் கொண்டு போய் வைத்தார். மனிதன் நினைக்க கூட முடியாத அவ்வளவு அழகான தீவு அந்த இலங்கை. அழகான பட்சிகள்! அழகான பாட்டுகள்! அழகான் புஷ்பங்கள்! அழகான வண்ணங்கள்! அங்குள்ள மரங்களின் மீது காற்று வீசுமானால், இனிய வாத்திய மொன்று ஒலிப்பது போல இருக்கும்.
இந்த மாதிரியான அழகுகளை யெல்லாம் சேர்த்து அந்தத் தீவில் ஏற்படுத்தி வைத்த பிறகு, ப்ரஹ்மா கூறினார், ‘இந்த ஆண் மகனும் பெண் மகளும் ஒருவர்க்கொருவர் முதலில் காதல் கொள்ளட்டும்; ஏனென்றால் விவாகத்திற்கு முன்னர் உண்மையான அன்பு முகிழ்க்க வேண்டுமென்பது என் விருப்பம்’ என்று, பின்னர், இவர்கள் காதல் கொண்டார்கள். பறவைகள் இன்னிசை முழக்கின; நட்சத்திரங்கள் பிரகாசித்தன; மலர்கள் மலர்ந்தன; இந்தக் காதலைச் சிறிது கற்பனைக் கண்ணால் பாருங்கள். மாமனார், மாமியார்களின் உபத்திரவமில்லை; அண்டை அயலார்களின் வம்புப் பேச்சுகள் இல்லை. ‘இளைஞனே! நீ எப்படி உன் காதலியை வைத்துக் காப்பாற்றப் போகிறாய்?’ என்று கேட்பாரும் இல்லை. இந்த மாதிரியான சங்கடங்களே இல்லை. ப்ரஹ்மாவானவர் இந்த இரண்டு பேருக்கும் பின்னர் விவாகம் நடத்தி வைத்தார். ‘இங்கே இருங்கள்; இந்தத் தீவை விட்டு வெளியிலெங்கும் செல்ல வேண்டாம்’ என்றும் இவர்களுக்கு ஆக்ஞாபித்தார். சிறிது காலம் வரை இருவரும் அப்படியே வசித்தார்கள். பின்னர், அந்த ஆண் மகன், - அவன் பெயர் ஆதம் - தன் பத்தினியான அந்தப் பெண்ணைப் பார்த்து - அவள் பெயர் ஏவாள் - ‘நான் சிறிது வெளியில் போய் சுற்றி வருகிறேன்’ என்று கூறினான். அப்படியே அவன் தீவின் வட பாகத்திற்குச் சென்று பார்த்தான். அங்கு ஒரு குறுகிய பூப்பிரதேசம் மிகவும் செழிப்புள்ளதாக இவன் கண்களுக்குப் புலப்பட்டது. உடனே ஏவாளைக் கூப்பிட்டு, ‘நாம் அந்த அழகிய நாட்டுக்குச் செல்வோம். இந்த நாட்டை விட அஃது எவ்வளேவா சிறப்புடையதா யிருக்கிறது’ என்று கூறினான். அவள் முதலில் மறுத்தாள். ஆயினும் ஆதமின் வற்புறுத்தலுக் கிணங்கி, அவன் பின்னால் சென்றாள். இருவரும் மேற்படி குறுகிய பிரதேசத்தைக் கடந்து சென்றதும், அந்தோ! அந்தப் பக்கத்தில் இருந்தது ஒரு நாடல்ல; சமுத்திரம். ஆதமின் கண்ணுக்கு அது செழிப்புள்ள பிரதேசமாகப் பட்டது. இருவரும் சமுத்திரத்தில் விழுந்துவிட்டார்கள். ப்ரஹ்மா, இவர் களைப் பார்த்து ‘கீழான நரகம் உங்களுக்குக் கிடைப்பதாக’ என்று சபித்தார்.
அப்பொழுது ஆதம் என்ற அந்த மனிதன் கூறினான்:- ‘ப்ரஹ்மாவே! என்னைச் சபியுங்கள்; அவளைச் சபிக்காதீர்கள். குற்றம் என்னுடையது; அவளுடையதல்ல’ இப்படிக் கூறிய அந்த மனிதனை நான் பாராட்டுகிறேன். இப்படிப்பட்ட மனிதனை வைத்துக் கொண்டு தான் உலகம் தொடங்கப் பட்டது.
ப்ரஹ்மா அந்த மனிதனைப் பார்த்து ‘ஏவாளைக் காப்பாற்றுவேனே தவிர உன்னைக் காப்பாற்ற மாட்டேன்’ என்று கூறினார். அப்பொழுது ஏவாள், ஹிருதய பூர்வகமாக ப்ரஹ்மாவைப் பார்த்து ‘அவரை (ஆதமை) காப்பாற்றா விட்டால் என்னையும் காப்பாற்ற வேண்டாம். அவரை விட்டு விட்டு வாழ எனக்கிஷ்ட மில்லை. அவரை நான் நேசிக்கிறேன்’ என்று கூறினாள். இதைக் கேட்ட ப்ரஹ்மா, சந்தோஷ மடைந்தவராகி, ‘உங்கள் இரண்டு பேரையுமே சபிக்காமல் விட்டு விடுகிறேன். உங்களையும் உங்கள் சந்ததியாரையும் காப்பாற்றி வருகிறேன்’ என்று சொன்னார்.
‘ஹீதன்கள்’ என்று சொல்லப்பட்ட இந்தப் புற சமயத்தின ரிடம் இன்னும் என்னென்ன உயரிய கருத்துக்கள் இருந்தன வென்பதை மேற்படி புஸ்தகத்திலிருந்து இன்னும் சில உதாரணங் களால் எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இந்தப் புற சமயவாதிகளை, (கிறிஸ்தவ மதத்திற்கு) மாற்ற நாம் தூர தேசங்களுக்குப் பாதிமார் களை அனுப்புகிறோம்; போர் வீரர்களையும் அனுப்புகிறோம். நமது சமீபத்திலிருப்பவர்களை நாம் மாற்றக்கூடாதா? இது கிடக்கட்டும். நாம் யாரை மத மாற்றவேண்டுமென்று விரும்பு கிறோமோ அவர்களுடைய புஸ்தகத்தில் என்ன கூறியிருக்கிற தென்று பார்ப்போம். ‘ஆண், பலம்; பெண், அழகு. ஆண், வீரம்; பெண், அன்பு; ஒரு புருஷன் ஒரு ஸ்திரீயையும், ஒரு ஸ்திரீ ஒரு புருஷனையும் பரஸ்பரம் நேசிக்கிற குடும்பத்தில், தேவதை களெல்லாம் தெய்வலோகத்தை விட்டு, மேற்படி குடும்பத்தில் வந்து தங்கிச் சந்தோஷமாகப் பாட்டிசைக்கிறார்கள்.’
இப்படிப்பட்ட உயர் கருத்துக்களைக் கொண்ட ஜாதியாரையே நாம் மதமாற்றப் பார்க்கிறோம். இதைச் சிறிது நினைத்துப் பாருங்கள். அன்பு என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல; பெருந்தன்மை யென்பது ஒரு ஜாதிக்கு மட்டும் உரிமைப் பொருளல்ல. அன்பும் கருணையும் நிறைந்த பலர், ஒவ்வொரு யுகத்திலும் எல்லா நாடுகளிலும் தோன்றியிருக்கிறார்கள்.
என்னுடைய அபிப்பிராயத்தில், புருஷனுக்குச் சமதை யானவள் ஸ்திரீ. ஆண் மகனாகிய எனக்கிருக்கும் எல்லா உரிமை களும் அவளுக்கு இருக்கின்றன. இன்னும் அதிகமான ஓர் உரிமையும் அவளுக்கு உண்டு. ஆண்களால் காப்பாற்றப்பட வேண்டிய உரிமையும் அவளுக்கு உண்டு. இதுதான் என் கொள்கை. நீங்கள் விவாகம் செய்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் நேசிக்கும் மனைவியைச் சந்தோஷமாக இருக்குமாறு செய்யுங்கள். தன்னுடைய சுகத்திற்காக மட்டும் எவனொருவன் விவாகம் செய்து கொள்கிறானோ அவன் தவறு செய்தவனாகிறான். ஆனால் எவனொருவன், ‘நான் காதலிக்கும் பெண்ணைச் சந்தோஷிப்பிக் கிறேன்’ என்று சொல்லி விவாகஞ் செய்து கொள்கிறானோ அவன் சரியான காரியத்தைச் செய்தவனாகிறான். நீ சந்தோஷமாயிருக்க வேண்டுமானால் பிறரைச் சந்தோஷப் படுத்து. குறுக்கு வழியாகச் சென்று விடுவதால் மட்டும் நீ சந்தோஷமடைய முடியாது. மற்றவர் களையும் அணைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
‘நான் ஒரு குடும்பத்திற்குத் தலைவன்; எஜமானன்’ என்று நினைக்கிறானே அவனை நான் வெறுக்கிறேன். வாலிபர்களான தம்பதிகள் இருவர், நிலவொளியிலே, காதல் பேச்சுக்களைப் பேசிக் கொண்டும், பறவைகள் இன்னிசை பாடுவதைக் கேட்டுக் கொண்டும் செல்கிறார்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். போகும்போது அவர்கள் திடீரென்று ஓரிடத்தில் ‘நம்மிலே யார் எஜமானன் என்பதை இங்கேயே முடிவு கட்ட வேண்டும்’ என்று பேச்சுத் தொடங்குவார்களானால், அஃது எவ்வளவு கேவலமா யிருக்கும்! அந்த எண்ணமே எவ்வளவு இழிவுபட்டது! தனது குடும்பத்தை ஆள்வதாகச் சொல்கிற ஒரு மனிதனை, தான் பேசுகிற போது எல்லோரும் மௌனமாயிருக்க வேண்டு மென்று கட்டளை யிடுகிற ஒரு மனிதனை, தன்னை எஜமானனாகக் கருதிக் கொண் டிருக்கும் மனிதனை நான் வெறுக்கிறேன். சொல்ல முடியாத அவ்வளவு வெறுப்பு அவன் மீது எனக்கு ஏற்படுகிறது.
சிடு சிடுத்த முகமுடைய மனிதனையும் நான் வெறுக்கிறேன். ஒரு நாளின் சூரியப் பிரகாசத்தைக் கொலை செய்ய அவனுக்கு என்ன உரிமையிருக்கிறது? வாழ்க்கையின் இன்பத்தைக் கொலை செய்ய அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? நீ வீட்டுக்குப்போகும் போது, பிரகாசமுள்ள ஒரு வெளிச்சம் போல் போக வேண்டும். அப்படி நீ கொண்டு செல்லும் வெளிச்சமானது, இரவில்கூட, ஜன்னல்களையும் நுழைவாயில் களையும் கடந்து சென்று இருட்டைப் பிரகாசப்படுத்த வேண்டும். சிலர் வீட்டுக்கு வரும் போதே, ‘என் மூளை குழம்பிக் கிடக்கிறது’ என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இன்னுஞ் சிலர், ‘ஐந்தாவது வட்டத்திற்கு யாரை ஆல்டர் மென்னாகத் தெரிந்தெடுப்பது’ என்று நினைத்துக் கொண்டே வருகிறார்கள். வேறு சிலர், அரசியலைப் பற்றி எண்ணிக் கொண்டு வருகிறார்கள். மற்றுஞ் சிலர், ஐந்து அல்லது ஆறு சதத்திற்கு வாங்கின காலிகோ துணியை எப்படி ஏழு சதத்திற்கு விற்பதென்று சிந்தித்த வண்ணம் வருகிறார்கள். இப்படிப்பட்டவர் களுக்கு எவ்வளவு அறிவுச் சோர்வு ஏற்பட்டிருக்குமென்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள். இத்தகையவர்கள், வீட்டுக்குள் நுழைந்தவுடன், வீட்டிலுள்ளார் அத்தனை பேரும் தங்களுடைய சுகத்தைக் கவனிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். வீட்டிலே ஐந்தாறு குழந்தைகள். அவைகளில் ஓரிரண்டுக்கு நோய் வேறே. இவைகளுக்கு ஆகாரங் கொடுத்து, விளையாட்டுக் காட்ட வேண்டி யிருக்கிறது; பாட வேண்டியிருக்கிறது. ஒரு கஜம் துணியை எவ்வளவு அதிகமான உபயோகத்திற்குக் கொண்டு வர முடியுமென்பதைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவெல்லாம் செய்கிற ஒரு ஸ்திரீ, சோர்வு காட்டிக் கொள்ளாமல், இனிய முகத்துடன் இந்தப் பெரிய மனிதன் இருக்கிறானே - குடும்பத்து எஜமானன் - இவனுக்கு சிசுருஷை செய்ய வேண்டியிருக்கிறது!
இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? கை நீளாத கருமியை நான் வெறுக்கிறேன். ஐந்து கோடி டாலர் அல்லது பத்து கோடி டாலர் பெறுமான ஆஸ்தியுடைய ஒரு பணக்காரன் இருக்கிறானென்று வைத்துக் கொள்ளுங்கள். அவன், தேவைகள் நிரம்பிய ஒரு நகரத்தில் - அதாவது ஏழைகள் வசிக்கும் ஒரு நகரத்தில் - வசித்துக் கொண்டு, தினந்தோறும், பிச்சைக்காரர்களுடைய சோர்ந்து போன கைகளையும், பஞ்சத்தினால் வெளுத்துப்போன உதடுகளையும் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியு மென்பது எனக்குத் தெரியவில்லை. இவைகளையெல்லாம் சகித்துக் கொண்டு எப்படி ஒரு மனிதன், தனது ஆசைப்பிடியில் இரண்டு அல்லது மூன்று கோடி டாலர்கள் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமென்பது என் சிந்தனைக்கு எட்டாத விஷயமாயிருக்கிறது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மனிதர்கள் சமுத்திரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிற போது, சமுத்திரக் கரையில் தட்டு முட்டுச் சாமான்களை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிற ஒருவனுடைய செய்கையைப் போலவே இந்தப் பணக்காரனுடைய செய்கையும் இருக்கிறதென்றுதான் நான் எண்ணிக் கொள்வேன்.
இன்னும் சில பேர்வழிகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் தங்களுடைய ஹிருதயத்தையும், கண்ணியத்தையும் ஒப்புக் கொடுத்து விடுவார்கள். ஆனால், தங்களுடைய வரவு செலவுக் கணக்குப் புஸ்தகத்தையோ, அல்லது ஒரு டாலர் நாணயத்தையோ ஒப்புக் கொடுக்க மாட்டார்கள். இத்தகையவர் களை நான் பார்க்கிறபோது, இவர்களுக்கு எந்தப் பொருள் சிறந்த தென்பது தெரிந்திருக்கிற தென்றே கருதுகிறேன். உங்கள் மனைவி, பிச்சைக்காரி போல் நிற்பதை நினைத்துப் பாருங்கள்! தினந்தோறும் அவள் உங்கள் எதிரில் வந்து நின்று ‘ஒரு டாலர் கொடுங்கள், இரண்டு டாலர் கொடுங்கள், ஐம்பது சதம் கொடுங்கள்’ என்று கேட்பதாக எண்ணிப் பாருங்கள்! ‘சென்ற வாரம் ஒரு டாலர் கொடுத்தேனே, அதை என்ன செய்தாய்?’ என்று நீங்கள் கேட்கிற போது, உங்கள் மனைவி உங்கள் எதிரில் நடுங்கி நிற்பதாக நினைத்துப் பாருங்கள்! பிச்சைக்கார சுபாவமும், கோழைத்தனமும் நிறைந்த ஒரு தாய் வயிற்றிலிருந்து என்ன மாதிரியான குழந்தைகள் பிறக்கு மென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? இந்த உலகத்திலே உங்களுக் கிருக்கும் ஆஸ்தியெல்லாம் ஒரு டாலர்தானா? அதனையும் செல வழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதா? அப்படியானால் அந்த ஒரு டாலரையும், ஓர் அரசனைப் போல் செலவழியுங்கள். அதனை, உலர்ந்துபோன ஒரு சருகு மாதிரியும், நீங்கள் எண்ணிறந்த காடுகளுக்குச் சொந்தக்காரன் மாதிரியும் நினைத்துச் செல வழியுங்கள். இப்படித்தான் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். நான், ஒரு பிச்சைக்காரனாக யிருந்து, அரசன்மாதிரி என்னிடமுள்ள கடைசி நாணயத்தைச் செல வழிப்பேனே தவிர, ஓர் அரசனாயிருந்து கொண்டு, பிச்சைக்காரன் மாதிரி என் பணத்தைச் செலவழிக்க விரும்ப மாட்டேன். அந்தப் பணம், என் கையிலிருந்து போக வேண்டியிருந்தால் அது தாராளமாகத்தான் போகட்டுமே.
எது சிறந்ததென்று கருதுகிறாயோ அதை உனது குடும்பத் திற்குக் கொண்டு கொடு. நீ எப்படி பார்வைக்கு லட்சணமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறாயோ அப்படியே உன் குடும்பத்தினரை யும் லட்சணமாக இருக்கும்படி செய். விவாகத்தின் போது உன் மனைவி மீது நீ காதல் கொண்ட சமயத்தில், ஆ! உன் கண்கள் எவ்வளவு பிரகாசமாயிருந்தன! உனது நடையில் எவ்வளவு கம்பீரம்! ஓர் அரச குமாரன் போலல்லவோ நீ காணப்பட்டாய்! அப்படிப் பட்ட நீ, இப்பொழுது துப்புக் கெட்டவன் போல் அழுக்கடைந் திருந்தாலும் ‘என் மனைவி என்னை நேசிக்க வேண்டும்’ என்று கருதுவாயானால், உன்னிடத்திலுள்ள அகம்பாவந்தான் என்ன? இந்த உலகத்திலே பிறந்த எந்த ஸ்திரீயும், அவளுக்கு நீ ஹிதத்தைச் செய்வாயாகில், அவள் உன்னிடம் உண்மையாகவே நடந்து கொள்வாள்.
‘உங்களுடைய காதல் தத்துவம், மனைவிமார்களைப் பற்றிய விஷயம் முதலியன வெல்லாம் பணக்காரர்களுக்குத்தான் ஏற்றதே யொழிய, ஏழைக்கு முடியாது’ என்று சிலர் எனக்குக் கூறுகிறார்கள். பணக்காரர்களின் மாளிகையைவிட, ஏழைகளின் குடிசைகளில் தான் அதிகமான அன்பு இருக்கிறது. வெளிப் பார்வைக்குக் கேவலமாயுள்ளதும் ஆனால் உள்ளே அன்பு நிறைந்ததுமான ஒரு குடிசைதான், கடவுளர்கள் வசிப்பதற்கு லாயக்காயுள்ள ஒரு மாளிகை; அன்பில்லாத ஒரு மாளிகையோ, வன விலங்குகள் வசிப்பதற்கு யோக்கியமாயுள்ள ஒரு குகை. இதுதான் என்னுடைய கொள்கை. யாரேனும் ஒருவனுக்குக்கூட உதவி செய்ய முடியாதபடி அவ்வளவு பரம ஏழையாக நீ இருக்க முடியாது. உலகத்திலே மிகவும் மலிவான சரக்கு நல்ல சுபாவம் தான். அன்பு ஒன்றே, வாங்குகிற வனுக்கும் கொடுக்கிறவனுக்கும் ஒன்றுக்குப் பத்து சதவிகிதம் அதிகமான லாபத்தைத் தரக்கூடியது. ‘நான் பணக்காரனாக இருந்தே தீர வேண்டியிருக்கிறது’ என்று சொல்லாதே. அமெரிக்காவில் நாம் பெருந்தன்மைக்கு ஒரு பொய் மதிப்பு ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். இங்கே நாம், ஒருவன் பெரிய மனிதனாயிருக்க வேண்டுமானால் அவன் பெயர் பிரசித்தையுடையதாயிருக்க வேண்டும்; அல்லது பெரும் பணக்காரனாக இருக்க வேண்டும்; அல்லது அவன் பெயர், ஊர் வம்புப் பேச்சுகளில் அடிபட வேண்டும் என்று கருதுகிறோம். இப்படியெல்லாந் தான் நாம் ஒரு பெரிய மனிதனை அளந்து பார்க்க விரும்புகிறோம். இவையெல்லாம் தவறு ஒருவன் சந்தோஷமா யிருப்பதற்கு அவன் பணக்காரனாயிருக்க வேண்டியதில்லை; பெரிய மனிதனாயிருக்க வேண்டியதில்லை; அதிகாரமுள்ளவனாகவும் இருக்க வேண்டியதில்லை. சந்தோஷமுள்ள மனிதன்தான் வெற்றியுள்ள மனிதனுங்கூட.
ஆத்மாவின் சட்டரீதியான பாதுகாவலன் சந்தோஷம். அந்தச் சந்தோஷந்தான் ஒருவனுடைய ஆஸ்தி.
சமீப காலத்தில் நெப்போலியனுடைய1 சமாதி முன்னர் போய் நின்றேன். இறந்து போன ஒரு கடவுளுக்குத் தகுதியுடையது போல் அந்தச் சமாதி, பொன்னாலும் மெருகாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பெயர் சொல்ல முடியாத அவ்வளவு அருமையான அந்தச் சலவைக்கல் சமாதியில், உயிரோடிருந்த போது ஒரு கணமேனும் ஓய்வு கொள்ளாத அந்த மனிதனுடைய சாம்பல் அடக்கம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அந்தச் சமாதிக் கட்டிடத்தின் மீது சிறிது சாய்ந்துகொண்டு, தற்கால உலகின் மிகப் பெரிய போர் வீரனாகிய அவனுடைய வாழ்க்கையின் மீது சிந்தனையைச் செலுத்தினேன்.
அவன் - அந்த நெப்போலியன் - தற்கொலை செய்து கொள்ளலாமா கூடாதா வென்று சிந்தித்த வண்ணம் சீன் நதிக்கரை யில் உலவிக் கொண்டிருக்கிறான்; ஒரு சமயம் டூலோன் நகரத்திலே இருக்கிறான்; மற்றொரு சமயம், பாரிஸ் நகரத்தில் ஜனக் கூட்டத்தை அடக்கும் வேலையில் முனைந்திருக்கிறான்; இன்னொரு சமயம் இத்தாலிய சேனையின் தலைவனாயிருந்து போரை நடத்துகிறான்; வேறொரு சமயம், மூவர்ணக் கொடியைக் கையில் பிடித்துக் கொண்டு லோடி வாராவதியைக் கடந்து செல்கிறான்; எகிப்தில் பிரமிட் கோபுரங்களின் நிழலில் அவன் நிற்கிறான்; ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்று பிரான்சின் கொடியை நிலை நாட்டு கிறான்; மாரெங்கோ என்ன, உல்ம் என்ன, ஆஸ்டெர்லிட்ஸ் என்ன முதலிய நகரங்களில் அவனைப் பார்க்கிறேன்; ருஷ்யாவில் அவ னுடைய காலாட்படையானது, உதிர்ந்த இலைகள் போல் சிதற அடிக்கப்படுகின்றது; அவன் லட்சக்கணக்கான துருப்புகளால் துரத்தப்பட்டு பாரிஸுக்கு ஓடிவருகிறான்; அவனை எல்பா நகரத் திற்குத் தேசப் பிரஷ்டம் செய்கிறார்கள்; ஆனால் அவன் தன் திறமையினால் தப்பியோடி வந்து மீண்டும் ஓர் ஏகாதிபத்தியத்தை ஸ்தாபிக்கிறான்; அந்தப் பயங்கரமான வாட்டர்லூ2 யுத்தத்திலே அவனைப் பார்க்கிறேன். அவனைக் கடைசியாக எங்கே பார்த்தேன்? செயிண்ட் ஹெலீனா தீவில், தன்னிருகைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டு, துக்கம் நிறைந்த சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன்.
அவனை - அந்த நெப்போலியனை - பார்த்த அதே சமயத்தில் அவன் காரணமாக உண்டான அநாதைகள் எத்தனை பேர்? விதவைகள் எத்தனை பேர்? இவர்களுடைய நினைவும் எனக்கு உண்டாயிற்று. அவனுடைய கீர்த்திக்காக எவ்வளவு கண்ணீர் சொரியப் பட்டது? அவனைக் காதலித்த அந்த ஒரே பெண்,1 எப்படி பேராசை காரணமாக அவனால் திரஸ்கரிக்கப் பட்டாள்? அவளுடைய நினைவும் வந்தது. அப்பொழுது எனக்குள்ளேயே நான் என்ன சொல்லிக் கொண்டேன் தெரியுமா? பலாத்காரமும் கொலை யும் சேர்ந்து ஏகாதிபத்திய உருவெடுத்தாற் போன்ற நெப்போலியன் என்ற அந்த பெரிய மனிதனைக் காட்டிலும், கிழிந்து போன செருப்புடன் கூடிய ஒரு பிரெஞ்சு குடியானவனாகவே இருக்க நான் விரும்புகிறேன்; திராட்சைக் கொடிகள் எந்தக் குடிசையின் கூரை மீது படர்ந்திருக் கின்றனவோ அந்தக் குடிசையில் வாழவே நான் பிரியப்படுகிறேன். தன் மனைவி பக்கத்திலே அமர்ந்து நூல் நூற்றுக் கொண்டிருக்க, தன் குழந்தைகள் தாளிலும் தோளிலும் விளையாட சந்தோஷகரமாக வாழ்க்கையை நடத்துகிறானே அந்தக் குடியானவ னாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். கனவு நனவுகளிலில்லாத புழுதி மண்ணின் மௌனத்தில் அடைக்கலம் புகுந்து கொள்ளவே நான் இச்சை கொள்கிறேன்.
சந்தோஷமநுபவிக்க, பெரிய மனிதனாயிருக்க வேண்டு மென்பது அவசியமில்லை. நியாயமாகவும் தாராள சிந்தையுடனும் நடந்து கொள்ளவும், தெய்விக அன்பு நிறைந்த ஹிருதயத்தோடு கூடியிருக்கவும், பணக்காரனாக இருக்க வேண்டுமென்பது நியதியில்லை. நீ பணக்காரனா யிருந்தாலும், ஏழையாயிருந்தாலும், உன் மனைவியை, சிறந்ததொரு புஷ்பம் போலப் பாராட்டு. அப்பொழுதுதான் அவள் உன் வாழ்க்கையை மணத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நிரப்புவாள்.
ஒரு விஷயம் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் எந்த ஸ்திரீயை உண்மையில் நேசிக்கிறீர்களோ, அவள், உங்கள் பார்வைக்கு எப்பொழுதும் வயோதிகமே அடைவதில்லை. காலம், அவள் முகத்தில் கோடுகளை இடலாம், வருஷங்கள், அவள் முகத்தில் திரை விழுமாறு செய்யலாம். ஆனால் நீங்கள் அவளை உண்மையில் நேசிப்பீர்களாயின், உங்களால் முதலில் காதலிக்கப்பட்டு உங்கள் ஹிருதயத்தைக் கவர்ந்து கொண்டவளாகவே அவள் எப்பொழுதும் இருக்கிறாள். அப்படியே ஒரு ஸ்திரீ, ஒரு புருஷனை உண்மையில் நேசிப்பாளாயின், அவனுடைய வயோதிகம் அவளுக்குப் படுவதே யில்லை; அவன் தளர்ச்சியுற்ற வனாகவோ கிழவனாகவோ அவள் பார்வைக்குப் புலப்படுவதே இல்லை. விவாகத்தின்போது தன் கையைப் பிடித்த வீர புருஷனாகவே அவன் அவளுக்குப்படுகிறான். காதல் நித்தியமானதல்லவா? இங்ஙனம் காதல் கொண்டு, தம்பதிகள் இருவரும் வாழ்க்கையாகிற பர்வதத்தின் மீது ஏறுகிறார்கள். பின்னர் இருவருமாக அங்கிருந்து இறங்குகிறேபாது - அதாவது வயோதிக காலத்தில் - காலமென்னும் விருட்சத்தின் இலை துளிர்க்காத கிளை களின் மீது இன்பமும் அன்பும் உள்ள பட்சிகள் மீண்டும் பாட் டிசைக்க, பேரப்பிள்ளைகளின் சிரிப்பை மகிழ்ச்சியுடன் கேட்கிறார்கள்.
அடுப்பங்கரையில் நம்பிக்கையுடையவன் நான். வீட்டின் ஜனநாயக வாழ்விலே நம்பிக்கையுடையவன் நான். குடும்பத்தின் குடியரசு வாழ்விலே நம்பிக்கையுடையவன் நான். சுதந்திரம், சமத்துவம், அன்பு ஆகியவற்றில் நம்பிக்கையுடையவன் நான்.
குழந்தைகளின் சுதந்திரம்
ஸ்திரீகளே அடிமைகளென்று சொன்னால், குழந்தைகளைப் பற்றி - சந்துகளிலும் பொந்துகளிலும் வசிக்கிற சிறு குழந்தைகளைப் பற்றி - தனங்கள் தகப்பனாருடைய காலடி ஓசையைக் கேட்டதும் முகம் வெளுத்துப் போகின்ற குழந்தைகளைப் பற்றி - தங்கள் தாயார், பெயர் சொல்லி அழைத்தவுடன், ஓடி ஒளிந்து கொள்கின்ற குழந்தைகளைப் பற்றி - கொந்தளிப்புள்ள, பைத்தியக்காரத்தனம் வாய்ந்த வாழ்க்கையாகிற கடல் இருக்கிறதே அதில் மிதக்க விடப்படுகிற, தூக்கி யெறிப்படுகிற குழந்தைகளைப் பற்றி நான் என்ன சொல்லப் போகிறேன்? என் ஹிருதயத்தையே அவர்களுக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறேன். அவ்வளவுதான்.
உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். நமக்குள்ள உரிமை களைப் போல் குழந்தைகளுக்கும் இருக்கின்றன. அவைகளை, மனிதப் பிறவிகள் என்று கருதி நாம் நடத்த வேண்டும். அவைகளை நாம் மிருகத்தனமாக நடத்தக் கூடாது. அன்பாக, இனிமையாக அவைகளை நடத்த வேண்டும். குழந்தைகளைப் பற்றி என்னுடைய அபிப்பிராயம் இது தான்.
உங்கள் குழந்தை ஒரு பொய் சொல்லி விட்டதென்று வைத்துக் கொள்ளுங்கள். உலகமே ஏதோ முழுகிவிட்டதுபோல், உடனே அவைகளை நோக்கி ஓடாதீர்கள். அவைகளிடம் கண்ணிய மாக நடந்து கொள்ளுங்கள். கொடூரம் வாய்ந்த ஒரு தகப்பனாரின் குழந்தைகள், பொய் சொல்கிறவர் களாகத்தான் இருப்பார்கள். இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா? கொடூரமும் பலஹீனமும் ஒன்று சேர்ந்த இடத்தில் பொய் பிறக்கிறது. நீங்கள் கடுகடுத்துக் கொண்டு, கையில் ஒரு தடியுடன் உங்கள் சிறு குழந்தையை நாடி ஓடினீர்க ளாயின், அது பொய்யைத் தானே சொல்லும்.
இயற்கை அன்னையே! ஒரு குழந்தையின் மூளையில் என்ன விதமான சாகஸத்தை வைத்திருக்கிறாய்? மிருகத்தனமுள்ள பெற்றோரால் தாக்கப் படுகிற போது, அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பொய் யென்னும் அணையை ஏற்படுத்திக் கொள்கிறது.
உங்கள் குழந்தை பொய்வார்த்தை சொல்லிவிட்டால், அவை களிடம் சரளமாகப் பேசுங்கள். ‘குழந்தாய்! நான் கூட உன்மாதிரி நூற்றுக்கணக்கான பொய்கள் சொல்லி யிருக்கிறேன். ஆனால் அது நல்லதல்ல; அதனால் பிரயோஜன மொன்றுமில்லை’ என்று இனிய வார்த்தைகளால் சொல்லுங்கள்.
உங்களை விட உருவத்தில் பெரியவனாயுள்ள ஒருவன், நீண்ட கழியொன்றெடுத்துக் கொண்டு உங்கள் எதிரே வந்து நின்று, ‘இந்தத் தட்டை உடைத்தது யார்?’ என்று இடிபோன்ற குரலில் கேட்டால், ‘நான் எடுக்கும் போது உடைந்து விட்டது’ என்று சொல்வீர்களா? மாட்டீர்கள். ‘நான் பார்க்கவில்லை’ யென்றுதான் சொல்வீர்கள். ஒரு வர்த்தகன், தன் மகன், வீண் வதந்திகளைக் கிளப்பி விட்டான் என்று சொல்லி அவனைச் சவுக்காலடித்தால் எப்படி யிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வக்கீல், தன் குழந்தைகள் உண்மையை மறைக்கின்றன வென்று சொல்லி - உண்மையை மறைத்துப் பேசியே அவனுடைய பிழைப்பு நடக்கிற போது - அவைகளை அடித்தால் எப்படியிருக்கும் என்று கருதிப்பாருங்கள். ஒரு மந்திரி, தான் நினைத்திருப்பதை யெல்லாம் தன் குழந்தை சொல்லவில்லை யென்பதற்காக அதனை அடித்தால் எப்படி யிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
உங்கள் குழந்தை ஒரு குற்றஞ் செய்துவிட்டால், அதனை உடனே கையாலெடுத்து அணைத்து கொள்ளுங்கள். அதன் ஹிருதயத்தோடு உங்கள் ஹிருதயமும் சேர்ந்து அடிப்பதாக அது உணரட்டும். நீங்கள் உண்மையாகவும் மனப்பூர்வமாகவும் அதனை நேசிக்கிறீர்கள் என்பதை அது தெரிந்து கொள்ளட்டும். ஆனால் கிறிஸ்தவ மத்தை அநுஷ்டிக்கிற சிலர் - அவர்கள் நல்லவர்கள் தான் - தங்கள் குழந்தை யொன்று, ஏதேனும் தவறு செய்து விட்டால், அந்தக் குழந்தையை, ‘மறுபடியும் இந்த வீட்டுக்குள் நுழைந்து இதனைக் களங்கப்படுத்தாதே’ என்று சொல்லி வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார்கள். இதனைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! பின்னர், இவர்களே, எந்தக் குழந்தையை வீட்டினின்று விரட்டி விட்டார்களோ அதே குழந்தையைக் காப்பாற்றுமாறு கடவுளை நோக்கி முழந்தாளிட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். என் குழந்தைகளைப் காப்பாற்றும் பொறுப்பை நான் ஒழுங்காக நிறைவேற்றாத வரை, கடவுளை நோக்கி என் குழந்தைகளைக் காப்பாற்றுமாறு கேட்க மாட்டேன்.
என்னுடைய குழந்தைகளைப் பார்த்து நான் என்ன சொல்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
‘நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்கள்; எந்த விதமான குற்றத்தையும் செய்யுங்கள்; எவ்வளவு கீழான நிலைமைக்கும் செல்லுங்கள்; என்ன விதமான தப்புக் காரியங்களை நீங்கள் செய்த போதிலும், என் வீட்டு வாசற்கதவோ, என் கைகளோ, என் ஹிருதயமோ உங்களுக்காக மூடப்பட்டு விடாது. என் உயிர் இருக்கிற வரை, உங்களுடைய உண்மையான தோழனாக நான் ஒருவன் இருப்பேன்.’
கிறிஸ்துநாதர் கூறினார்:- ‘சிறிய குழந்தைகளை என்னிடம் வரச் செய்யுங்கள். அப்படிப்பட்டதுதான் மோட்ச ராஜ்யம்.’ அப்படி அவர் கூறியபோது, தனது உடையின் கீழ் ஒரு சாட்டையை ஒளித்து வைத்துக் கொண்டிருந்தா ரென்றும், குழந்தைகளை அடிப்பதற்காகத் தம்மிடம் நெருங்கி வரச்சொன்னாரென்றும் சிலர் எண்ணிக் கொண்டு, தங்கள் குழந்தைகள் விஷயத்தில் நடந்து கொள்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சாட்டையடி அரசாங்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. உங்களில் யாராவது சவுக்கு எடுத்துக் கொண்டு உங்கள் குழந்தையை அடிக்கிற தருணத்தில், உங்களையே போடோ பிடிக்கச் சொல்லுங்கள். உங்கள் முகம் சிவந்திருக்க, உங்கள் குழந்தை கண்ணீர் வடிக்க, அதன் மோவாய்க் கட்டை பயத்தினால் குழி விழுந்து போக என்ன காட்சி! அவசியம் போடோ எடுக்கச் சொல்லுங்கள்! இப்படி உங்களால் அடிக்கப்படுகிற குழந்தை இறந்து விட்ட தென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அதன் சமாதியினருகிற் சென்று உட்கார்ந்து கொள்ளுங்கள். நீங்கள் குழந்தையை அடித்தபோது எடுத்த போடோ இருக்கிறதே அதனையும், எந்தச் சதையை அடித்தீர்களோ அந்தச் சதை இப்பொழுது மண்ணோடு மண்ணாகிக் கிடப்பதையும் ஒன்று சேர்த்துப் பாருங்கள். ஓ! இப்படியெல்லாம் செய்வது தவறு. குழந்தைகளை வளர்ப்பதற்கு இது சரியான வழி யில்லை உங்கள் வீட்டில் எப்பொழுதும் சந்தோஷம் நிறைந்திருக்கச் செய்யுங்கள். அவர்களிடம் நாணயமாக நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கையின் எல்லா அமிசங்களிலும் சம பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
அவர்களுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள்; சிறிது அன்பு காட்டுங்கள். உங்கள் வீட்டை விட்டு அவர்களைத் துரத்த முடியாது. அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று ஆவல் கொள்வார்கள். அவர்கள் குதூகலமா யிருக்கிற மாதிரி வீட்டை வைத்திருங்கள். அவர்கள் எந்த மாதிரியான விளையாட்டை வேண்டுமானாலும் விளையாடட்டும். ‘அந்தத் தரையிலே பந்து விளையாடுங்கள்; ஆனால் அந்தப் பச்சைத் துணி மீது பந்து விளையாடக் கூடாது. அந்தச் சாமான்களை நீங்கள் சுத்தியெடுத்து அடிக்கலாம்; ஆனால் அவைகளைச் சிறிய பிரம்பெடுத்துத் தள்ளக் கூடாது. சிறிய காகிதத் துண்டுகளை வைத்துக் கொண்டு விளையாடுங்கள்; ஆனால் அந்தக் கார்டுகளை மட்டும் எடுக்கக் கூடாது’ என்று இப்படி யெல்லாம் குழந்தைகளைப் பார்த்துச் சொல்லாதீர்கள். ‘தங்களை விடக் கீழானவர்களைப் போல் நடித்துக் காட்டும் பொம்மலாட்டத்திற்கு நீங்கள் போகலாம். ஆனால் சிறந்த அறிஞர்களால் எழுதி நடிக்கப் பெறுகிற நாடகங்களுக்கு மட்டும் நீங்கள் போகக் கூடாது’ என்று உங்கள் குழந்தைகளைப் பார்த்துச் சொல்வதாக நினைத்துப் பாருங்கள். எவ்வளவு கேவலம்?
குழந்தைகள் வீட்டிலேயே தங்கி யிருக்க வேண்டுமென்பது உங்கள் விருப்பமானால், அவர்களுக்கு அந்த வீட்டில் சிறிது பிரகாசம் இருக்குமாறு செய்யுங்கள். குழந்தை தொட்டிலில் படுத்திருக்கிற காலத்திலிருந்தே, ‘அதைச் செய்யாதே; இதைச் செய்யாதே’ என்று கட்டு திட்டம் போட ஆரம்பித்து விடாதீர்கள். தொட்டிற் பருவத்திலிருந்து இருபத்தோரு வயது வரை இந்தச் ‘செய்யாதே’ பாடந்தான் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கப் படுகிறது. இருபத்தோரு வயதான பிறகு மற்றவர்கள் ‘செய்யாதே’ பாடத்தைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அதன் பிறகு மதம்; அதன் பின்னர் அவன் எந்த அரசியல் கட்சியில் சேர்ந்திருக்கிறானோ அந்த அரசியல் கட்சி. இப்படியெல்லாருமே வரிசையாகச் ‘செய்யாதே’ வாசகத்தையே திருப்பித் திருப்பிப் படிக்கிறார்கள்.
உலகத்தில் இந்த மாதிரியான வாழ்க்கை நடத்துவதை நான் வெறுக்கிறேன். நாம் சுதந்திரத்தோடு இருப்போம். சிறிதளவாவது சுதந்திரம் இருக்கட்டும். என்னை மத விரோதி யென்று சொல்லுங்கள்; நாஸ்திகன் என்று சொல்லுங்கள்; வேறென்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்; எனக்குக் கவலையில்லை. என்னுடைய குழந்தை களை நான் எப்படி நடத்துவேன் தெரியுமா? நான் இறந்துபோன பிறகு, என்னுடைய சமாதியினருகில் அவர்கள் வந்து நின்று ‘இதோ இங்கே யார் நித்திய நித்திரை செய்கின்றாரோ அவர், எங்களுக்கு ஒரு நிமிஷ நேரமேனும் வருத்த முண்டு பண்ணியதில்லை. அவருடைய வாயிலிருந்து - அந்தோ! அஃது இப்பொழுது மண்ணாகி விட்டது - ஒரு கடுமையான வார்த்தைகூட வெளி வந்ததில்லை’ என்று சொல்லக் கூடிய மாதிரி நான் அவர்களை நடத்துவேன்.
குழந்தைகள் கொடூரமாக நடத்தப்படுவதை ஆட்சேபித்தால் ‘அவர்கள் சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள்; அவர்களைத் திருத்த வேண்டியது அவசியம்’ என்று சிலர் சமாதானங் கூறுகிறார்கள். குழந்தைகள் சீர்கெட்டுப் போயிருக்கிறார்களென்று சொல்லப் படுகிற இந்த விஷயமிருக்கிறதே அது யுகக்கணக்காகச் சொல்லப் படுகிற விஷயந்தான். மதமானது, குழந்தையை, குற்றமே நிறைந்த ஓர் உருவமென்றும், எல்லையற்ற சாபமென்றும், நித்திய நரகாக்கினி யிலே அழிய வேண்டிய பொருளென்றும் கருதுகிறது.
குழந்தைகள், சில நாட்களில் சந்தோஷமாயிருக்கக் கூடாது, சிரிக்கக் கூடாது என்று முன் காலத்தில் சிலர் நினைத்திருந்தார்கள். நான் சிறு பையனாயிருந்த போது, ஞாயிற்றுக்கிழமை ஒரு புனித மான நாளென்றும் அன்று சிரிப்பும் விளையாட்டுமாக இருக்கக் கூடாதென்றும் பெரியோர்கள் எடுத்துச் சொல்வார்கள். அப்பொழு தெல்லாம், சனிக்கிழமை சாயந்திரம் சூரியன் அஸ்தமித்தவுடன், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவிடும். சனிக்கிழமை மாலையான வுடன், இரவை விட பதினாயிரம் மடங்கு கொடுமையான துக்க இருள் சூழ்ந்து கொண்டு விடும். ஒரு சந்தோஷ வார்த்தை கூட யாரும் பேச மாட்டார்கள். யாரும் சிரிக்க மாட்டார்கள். யார் முகத்திலாவது புன்சிரிப்பு காண வேண்டுமே; இல்லவே இல்லை. எந்தக் குழந்தை நோயாளி போல் தன் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறதோ அந்தக் குழந்தைதான் தெய்வ பக்தியுள்ள குழந்தை யென்று கருதப்பட்டது. யாரும் பாக்குக் கூட கடிக்கக் கூடாது. சும்மாவாகவாவது வாயை மென்று கொண்டிருந்தால் அது கூட மனதின் இழி தன்மையைக் காட்டுவதாக எண்ணப்படும். அன்று இரவு எல்லோரும் மௌனமாயிருந்து கழிக்க வேண்டும். மூச்சு விடுகிற காற்றிலே கூட அஜீரண ரோகம் காணப்பட்டது. ஒவ்வொருவரும் துக்கம் நிறைந்தவராகக் காணப்பட்டனர். யாருக்கு அஜீர்ணரோகம் அதிகமாகப் பாதிக்கிறதோ அவர்களுக்கு அதிகமான மதபக்தி இருக்கிறதென்று சிலர் கருதுகிறார்கள். இந்த அஜீர்ண ரோகத்திற்கு ஏதேனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், அது, தெய்வத் திருச் சபையைப் பலமாகத் தாக்கி விட்டது போலாகும்.
ஞாயிற்றுக்கிழமை உதயமானதும் இந்த தெய்வ பக்தியானது அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது. நாங்கள் எல்லோரும் தேவாலயத் திற்குச் செல்வோம். பாதிரியார், இருபது அடி உயரமுள்ள ஒரு மேடையின் மீது நின்று கொண்டு உபதேசம் செய்வார். முதலாவது இரண்டாவது என்று வரிசையாக இருபத்து மூன்றாவது வரை சொல்லிக் கொண்டு போய், பின்னர் நடைமுறையில் கொணர வேண்டிய சில விஷயங்களைப் பற்றிப் பேசுவார். சுமார் இரண்டு மணி நேரம் பேசி, கடைசியில் கடவுள் அவதரித்து உண்மைகளைச் சொன்ன வரலாற்றோடு முடிப்பார்.
அந்தக் காலத்தில் - அதாவது நான் சிறு குழந்தையாயிருந்த போது - தேவாலயத்தில் எவ்வளவு குளிராயிருந்த போதிலும், கணப்புச் சட்டி வைத்துக் கொள்வது கிடையாது. ஏனென்றால் கடவுளைத் தொழுகின்ற சமயத்தில் நாம் சௌக்கியமாயிருக்கக் கூடாதாம். எந்தத் தேவாலய மானது, முதன் முதலாகக் கணப்புச் சட்டியை வைத்துக் கொண்டதோ அந்த ஆலயத்தில் கட்சிப் பிளவுகள் ஏற்பட்டன. அப்படியே, இசைக் கருவியோடு பிரார்த்தனை செய்த தேவாலயத்திலும் பிளவுகள் ஏற்பட்டன.
இந்த முதல் உபதேசம் முடிந்தவுடன் சிறிது ஓய்வு இருக்கும். மீண்டும் உபதேசம் நடக்கும். ‘நீங்களெல்லாரும் நரகத்திற்குப் போகத் தானே லாயக்குள்ளவர்கள்’ என்று பாதிரியார் கேட்பார். ‘ஆம்’ என்று நாங்கள் பதில் கூறுவோம். ‘நீங்களெல்லோரும் நரகத்திற்குப் போக வேண்டுமென்பது கடவுளின் ஆக்ஞையா யிருந்தால் அதற்குச் சம்மதிக் கிறீர்களா?’ என்று மீண்டும் பாதிரியார் கேட்பார் ‘ஆம்’ என்று, எல்லோரும் உரக்கக் கூச்சல் போடுவோம். மறுபடியும் பழைய மாதிரி உபதேசம் நடக்கும். எல்லாம் முடிந்த வுடன் வீட்டுக்கு வருவோம். பின்னர், மாலையில், பெரியோர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சமாதி இடங் களுக்கு எங்களை அழைத்துச் செல்வார்கள். அப்படி அழைத்துச் சென்றது, எனக்கு உண்மையிலேயே சந்தோஷமாயிருந்தது. மௌனமாயிருக்கும் கல்லறைகளைப் பார்த்ததும், நான் சிறிது மன ஆறுதலே பெற்றேன். வீட்டுக்குத் திரும்பி வந்ததும், சில புஸ்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள்.
இப்படி ஞாயிற்றுக்கிழமை ஒரு விதமாகக் கழியும். அன்று சூரியன் அஸ்தமித்ததும் எங்களுக்கு விடுதலைதான். மாலை மூன்று அல்லது நான்கு மணிக்கெல்லாம், சூரியன் எப்படி மலைவாயிலில் விழுகிறான் என்று பார்க்க நாங்கள் வெளியே செல்வாம். சூரியன், சீக்கிரமாக மறையாமல் அப்படியே நின்று விட்டானோ என்று கூட எங்களுக்குத் தோன்றும். கடைசியில் சூரியாஸ்தமனம் ஆகும். உடனே நாங்கள் குதூகலத்தோடு கூத்தாடுவோம்.
ஓய்வு நாட்கள் என்று சொல்லப்படுகிற இந்தப் புனித தினங்கள் எங்களுக்குச் சிறைச்சாலை மாதிரி தான். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அன்று சிறைக் காவலன்தான்; ஒவ்வொரு குழந்தை யும் அன்று ஒரு கைதிதான். இந்த இருட்டுச் சிறையிலே சிரிப்பது கூட ஒரு குற்றம். இந்த புனித நாளில் ஒரு குழந்தை சிரித்தால் அது குற்றமாகக் கருதப்பட்டது. இதைச் சிறிது நினைத்துப் பாருங்கள்.
ஒரு சிறு குழந்தை, புஷ்பித்திருக்கிற ஒரு மரத்தின் அருகிற் சென்று அதன் மீது சாய்ந்து கொண்டிருக்கிற தென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அந்த மரத்துக் கிளைகளின் மீது சில பட்சிகள் உட்கார்ந்து அழகாகப் பாடுகின்றன. அந்தச் சமயத்தில் அந்தக் குழந்தை நரகத்தை பற்றி நினைக்கத் தொடங்குமாகில் அந்தோ! என்ன பரிதாபம்!
கிறிஸ்தவ மதத்தில் சேராதவர்கள் கதி என்னவாகும் என்பதைப் பற்றிப் பாதிரிமார்கள் செய்கிற உபதேசங்களை நான் கேட்டிருக்கிறேன். ‘கோடிக்கணக்கான வருஷங்களுக்கு ஒரு முறை ஒரு பறவையானது, தனது மூக்கின் நுனியால் ஒவ்வொரு மணலாக எடுத்துச் சென்றால், இந்த உலகத்தையெல்லாம் இந்தவிதமாக எடுத்துச் செல்ல எத்தனை வருஷங்கள் பிடிக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்’ என்று சொல்வார்கள். குழந்தைகளுக்கு இந்த மாதிரியான கருத்துக்களைச் சொல்வது எவ்வளவு சரியென்பதை நினைத்துப் பாருங்கள்.
ஒரு குழந்தையினுடைய சிரிப்புத்தான், புனிதமான நாளை இன்னும் அதிகமாகப் புனிதப்படுத்தும். ஓ! பாடகனே! நீ எவ்வளவு இனிமையாக வேண்டுமானாலும் பாடலாம். குழல் ஊதுவோனே! சந்திர கிரணங் களையும் குளிர்விக்கும்படி நீ குழல் ஊதலாம். உன் இசை கேட்டுக் காதலர்கள் பரவச மடையலாம். ஆனால், பாடகனே! ஊதுகுழலோனே! உங்களுடைய இன்னிசையெல்லாம், குழந்தை யின் புன்சிரிப்புக்கு முன்னர் அபஸ்வரமல்லவோ? அந்தச் சிரிப்புத் தான், கண்களில் ஒளியைக் கொடுக்கிறது; இருதயத்தைச் சந்தோஷப் படுத்துகிறது. ஓ! சிரிப்பாகிற நதியே! நீதான் மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலே யுள்ள எல்லை. உன்னிடத்திலிருந்து உதிக்கின்ற ஒவ்வோர் அலையும் கவலையை ஒழிக்கும் சக்தியைப் பெற்றிருக்கின்றது. நீ கன்னத்தில் ஒளி கொடுத்துப் பிரகாசிக்கிற போது, அங்கே கண்ணீர் தங்கி யிருந்தால் அது தானாகவே மறைந்து விடுகிறது.
இப்படியெல்லா மிருந்தும், சாசுவத தண்டனை என்ற கொள்கை, குழந்தைகளின் மனத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்கையை நான் பலமாகக் கண்டிக்கிறேன். ஆண் களுக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாசுவத தண்டனை உண்டு என்ற கொள்கை எங்கிருந்து வந்தது, பழைய காலத்தில் காட்டு மிராண்டிகளாகக் குகையில் வசித்துக் கொண்டிருந்தார் களே அவர்களுடைய மூளையிலிருந்து வந்தது. மிருக ஜாதியின் அடையாள மிது. தன் ஆகாரத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் பாம்பின் பிரகாசமான கண்களிலிருந்து பிறந்தது இந்தக் கொள்கை. காட்டு மிருகங்களின் ஊளையினின்றும், உறுமலினின்றும் பிறந்தது இந்தக் கொள்கை. காட்டு மிருகங்களின் ஊளையினின்றும், உறுமலினின்றும் பிறந்தது இந்தக் கொள்கை. என்தேகத்து ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தக் கொள்கையைக் கண்டிக்கிறது. தான் மனப் பூர்வமாகக் கொண்டிருக்கிற ஒரு நம்பிக்கையை வெளியிட்டுச் சொல்கிற தன் குழந்தைகளைத் தண்டிக்கிற ஒரு கடவுள் கம்பீரமான அந்த மோட்ச லோகத்தில் உட்கார்ந் திருக்கிறார் என்று எனக்குச் சொல்லுங்கள்! உங்களுடைய வைதிக நம்பிக்கைப் பிரகாரம் பார்த்தால், உலகத்தில் எத்தனை நாடுகள் இருக்கின்றனவோ அந்தக் காடுகளில், எத்தனை மரங்கள் இருக் கின்றனவோ அந்த மரங்களில், எத்தனை இலைகள் இருக்கின் றனவோ அத்தனை இலைகளை விட பதினாயிரக்கணக்கு அதிக மான ஜனங்கள், தங்கள் பாவச் செய்கைக்காக இறந்து போயிருக்க வேண்டும். இத்தனை பேரும் நரகத்திலேயே இருக்கிறார்களா? இவர்களெல்லோரும் துன்ப மநுபவித்துக் கொண்டேயிருக்கிறார் களா? இந்தக் குழந்தைகள் சாசுவத தண்டனைக்குட் படவேண்டிய வர்கள்தானா? இந்தக் கொள்கையானது, பொய்களிலே மிகக் கேவலமான பொய் யென்று நான் கூறுவேன்.
மானிட சமுதாயத்தின் நம்பிக்கைகளென்ன, ஆவல்களென்ன இவை யெல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டும், மானிட ஜாதி யென்னும் மூட்டையைச் சுமந்து கொண்டும் செல்கிற கப்பலானது, மரணம், துன்பம், அழிவு ஆகியவற்றின் இராக்காலமாகிற ஆழத்தில் மூழ்கிப் போகுமானால், அந்தக் கப்பலோடு நானும் மூழ்கிவிட விரும்புகிறேன். ஏதாவது ஒரு வைதிகப் படகைப் பிடித்துக் கொண்டு, எப்படியாவது தப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற கேவல புத்தி எனக்குக் கிடையாது. என்னை யார் நேசிக்கிறார்களோ அவர்களுட னும், நான் யாரை நேசிக்கிறேனோ அவர்களுடனும் அந்தக் கப்பலோடு கப்பலாக நான் மூழ்கிப் போகவே விரும்பு கிறேன். தமது குழந்தைகளைச் சாசுவதமான துன்பத்திற்கு உட் படுத்துகிற பரம பிதாவான ஒரு கடவுள் இருப்பாரானால், அந்தக் கொடிய கடவுளோடு நான் மோட்ச லோகத்திலிருப்பதைக் காட்டிலும் நரகத்திலேயே வசிக்க விரும்புவேன். இப்பொழுது என்னுடைய வழியைத் தெளிவுப் படுத்திக் கூறுகிறேன். மேலே சொன்ன கொள்கை கேவலமான தென்றே நான் கருதுகிறேன். இந்தக் கொள்கையானது, அநேக மனிதர்களுடைய கன்னங்களில் கண்ணீரை நிரப்பி விட்டிருக்கிறது; குழந்தைகளின் இருதயத்தைக் களங்கப்படுத்தி விட்டிருக்கிறது. இந்தக் கொள்கையானது, ஒவ்வோர் ஆண், பெண், குழந்தைக்கும் சதா அச்சத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. நல்லவர்களின் மனத்தில் பயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. ஆனால் கீழ் மக்களிடத்தில் இந்தக் கொள்கை எவ்வித மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. இந்தக் கொள்கை யானது, மென்மையான சுபாவமுடையவர்களின் இருதயத்தை உடைத்து விட்டது; நல்லவர்களின் கன்னங்களில் கோடுகள் இட்டு விட்டது. இந்தக் கொள்கை மீண்டும் உபதேசிக்கப்படவே கூடாது. புரோகிதரே! சமாதியின் நுழைவாயிலில், நித்தியத்துவத்தின் நுழைவாயிலில் நின்றுகொண்டு, எதிர்காலத்தைப் பயங்கரமான தாகவும் அச்சத்தோடு கூடியதாகவும் செய்ய உங்களுக்கு என்ன உரிமைஇருக்கிறது? இந்தக் கொள்கையை நானும் நம்பவில்லை; நீங்களும் நம்பவில்லை. அப்படி நீங்கள் நம்புவீர்களானால், உங்களால் ஒரு கண நேரமும் தூங்கமுடியாது. களங்கமற்ற இருதய முடையவன், இந்தக் கொள்கையை நம்புவானாகில், அவன் பைத்தியக்காரனாகப் போய்விடுவான். அப்படி எவனொருவன் இந்தக் கொள்கையில் நம்பிக்கை கொண்டு விட்ட பிறகுகூட பைத்தியக்காரனாக மாறவில்லையோ அவன் பாம்பின் இருதயமும், கழுதைப் புலியின் மனச் சாட்சியுமுடையவன்.
இந்தக் கொள்கையானது, மதத்தில் பெயரால், விசுவப் பிரேமையின் பெயரால், எல்லையற்ற அன்பின் பெயரால் பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்தக் கொள்கையைப் புகுத்தி, உங்கள் குழந்தைகளின் மனத்தை அசுத்தப்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள், தங்களுக்குத் தாங்களே படிக்கட்டும்; தங்களுக்குத் தாங்களே சிந்திக்கட்டும்.
ஏதோ வரிசைப் படுத்தி நிறுத்த வேண்டிய வைதிக ஸ்தம்பங்கள் என்கிற மாதிரி உங்கள் குழந்தைகளை நடத்தாதீர்கள். வெளிச்சம், சூரியப் பிரகாசம், காற்று இவை தேவையாயுள்ள மரங்களைப் போல் நடத்துங்கள். அவர்களிடம் நியாயமாகவும் நாணயமாகவும் நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். அவர்களுடைய உரிமைகளும் உங்களுடைய உரிமை களும் சமமானவை தான். நீங்கள் அவர்களை அதிகாரஞ்செலுத்த வேண்டுமென்றும், அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டு மென்றும் எண்ணாதீர்கள். ஆண்டான் அடிமை எண்ணத்தையே அகற்றி விடுங்கள்.
பழைய காலத்துப் பெரியோர்கள் என்ன செய்வது வழக்க மென்றால், குழந்தைகளுக்குத் தூக்கம் வராதிருக்கிற போதே, அவர்களைப் படுக்கைக்குப் போகுமாறு சொல்வார்கள்; தூங்கிக் கொண்டிருக்கிற போது அவர்களை எழுப்பி விடுவார்கள். நான் சொல்வது என்னவென்றால், தூக்கம் வருகிற போது குழந்தைகள் படுக்கச் செல்லட்டும்; தூக்கம் வராதிருக்கிற போது விழித்துக் கொள்ளட்டும் என்பது தான்.
‘ஓ! இந்தத் தத்துவங்களை யெல்லாம் பணக்காரர்களுக்குப் போய்ச் சொல்லுங்கள்; ஏழைகளுக்கு வேண்டாம்’ என்று நீங்கள் சொல்லலாம். ஏழை மக்கள், அதிகாலையிலேயே தங்கள் குழந்தை களை எழுப்ப வேண்டியவர்களானால், அப்படி எழுப்புகிற போது, அடித்து எழுப்புவதை விட ஒரு முத்தங்கொடுத்து எழுப்பக் கூடாதா? உங்கள் குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுங்கள்; அவர்கள் தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளட்டும். உங்கள் குழந்தைகள், விரும்பியதைத் தின்னட்டும். எதைத் தின்ன வேண்டுமென்பது அவர்களுடைய வேலையல்லவா? உங்களுடைய வேலையல்லவே. தங்களுக்கு எது விருப்பமானது என்பது அவர் களுக்குத் தெரியும். அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சுதந்திரத்தைக் கொடுத்து விட்டோமானால், தங்களுக்கு எது தேவை யென்பதை, வைத்தியர்களைவிட நன்றாக நிர்ணயித்துக் கொள்வார்கள். வைத்திய சாஸ்திரத்திலே ஏற்பட்டுள்ள அபிவிருத்திக் கெல்லாம் காரணமென்ன தெரியுமா? நோயாளிகளின் அஜாக்கிரதைதான்; வைத்தியர்களின் அஜாக்கிரதையல்ல. அநேக காலமாக ஒருவன் ஜுரத்தோடு படுத்துக் கொண்டிருப்பானாகில் அவனுக்கு ஒரு பொட்டுத் தண்ணீர்கூட கொடுக்ககூடா தென்று வைத்தியர்கள் சொல்வார்கள். ஏனென்றால் அது விஷமாம். ஆனால் எவனாவது ஒரு ஜுரக்காரன், ‘இந்த தாகத்தைச் சகித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இறந்து விடுவதே மேல்’ என்று சொல்லி, ஒரு குவளைத் தண்ணீரைக் குடித்து விடுவான். அவனுக்குச் சௌக்கியமும் ஆகிவிடும். வைத்தியர்களுக்கு இதை எடுத்துச் சொன்னால், அவர்கள் ஆச்சரியப்பட்டு, இந்த அபாயத்திலிருந்து தப்பின நோயாளியின் தேக வலிமையைப் பாராட்டுவார்கள். அந்த நோயாளியோ, தண்ணீரைக் குடித்தே சொஸ்தமடைந்து விடுவான். கடைசியில் தான் வைத்தியர்கள் சொல்வார்கள். ‘ஜுரத்தின் போது தண்ணீரைக் குடிப்பது நல்லது’ என்று, ஆகையால் இந்த மாதிரியான விஷயங் களில், வைத்தியர் களின் முடிவுகளைக் காட்டிலும், இயற்கையின் வாசகத்தில்தான் எனக்கு நம்பிக்கை யிருக்கிறது.
குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுங்கள்; அவர்கள் உங்கள் வழிக்கு வருவார்கள். நீங்கள் செய்கிற மாதிரியே அவர்களும் செய்வார்கள். ஆனால், இன்னதைத்தான் செய்யவேண்டுமென்று வற்புறுத்துவீர் களானால், மானிட ஹிருதயத்தில் குடிகொண் டிருக்கும் ஏதோ ஒரு அபார சக்தி, பிறரால் ஏவப்படுவதை எதிர்த்து நிற்குமாறு செய்கிறது. இந்தச் சக்தி மனிதர்களுக்கு இருக்கிற தென்பது, உலகத்திலேயே மிகவும் அதிருஷ்டம் வாய்ந்ததாகும். ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னர், எல்லா ஜனங்களும் வைத்தியர் களுடைய யோசனைப்படி நடந்திருப்பார்களானால், அவர்க ளுடைய கதி என்னவாயிருக்கும்? எல்லோரும் இறந்து போயிருப் பார்கள். உலக சரித்திரத்தின் எந்த யுகத்திலேனும், ஜனங்கள் தெய்வத் திருச் சபையின் வழி பற்றி நடந்திருப்பார்களானால், அவர்கள் எல்லோரும் மூடர்களாகப் போயிருப்பார்கள். எந்தக் காலத்திலும், எந்த யுகத்திலும், தனக்குத்தானே சிந்திக்கிற ஒரு மகான் அவதரித்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் ஒரு நிம்மதியைத் தருகிறது.
குழந்தைகளுக்கு, தங்களுக்குத் தாங்களே சிந்திக்கின்ற உரிமையைக் கொடுப்பது நல்லதென்று நான் கருதுகிறேன். குடும்பத்திலே ஜனநாயகம் நிலவ வேண்டுமென்பது என் நம்பிக்கை. இந்த உலகத்தில் மகத்தானது ஏதேனு மொன்றிருக்குமானால், அதுதான் எல்லோரும் சமமாக இருக்கிற ஒரு குடும்பம்.
சமீப காலம் வரையில், பெற்றோர்கள், குழந்தைகள் சாப்பிடுகிற போது ‘வாய்திறவாமல் சாப்பிடுங்கள்’ என்று சொல் வார்கள். சாப்பிடுவது ஏதோ வைதிகச் சடங்கு என்கிற மாதிரி அவர்கள் சாப்பிடுவார்கள். வாழ்க்கையை, பயபக்தியோடு நாம் பார்க்கவே கூடாது. குழந்தைகள் சாப்பிடுகிற பொழுது, ஒருவர்க் கொருவர், தாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கவே நான் விரும்புகிறேன். சங்கீதத்தை விட, குழந்தைகளின் இந்தப் பேச்சுக்கள் தான் என் செவிக்கு இனிமை பயக்கின்றன.
குழந்தைகள் சுதந்திரமாயிருக்கட்டும். அவர்களிடம் நியாய மாகவும் நாணயமாகவும் நீங்கள் நடந்து கொள்ளுங்கள். அவர் களிடம் இனிமையாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்க ளுடைய அன்பையும் சந்தோஷத்தையும் அதிகப்படுத்துவார்கள்.
ஆண்கள் விருட்சங்கள்; பெண்கள் அந்த விருட்சங்களைத் தழுவி யிருக்கும் கொடிகள்; குழந்தைகள், அந்தக் கொடிகளில் மலரும் மலர்கள்.
மானிட சமுதாயம் எத்தனையோ எண்ணிறந்த குற்றங்களைச் செய்திருக்கிறது. அதற்காக மானிட சமுதாயத்தை நான் மன்னித்து விடவும் தயார். இந்த உலகம், நல்லவர்களை உயர்த்தக் கூடிய விதமாக அமைக்கப்படவில்லை. பூவுலகில் பெரும்பாகம் நீர்ப் பரப்பாயிருக்கிறது. இதனால், மீன் உற்பத்தித் தொழிலுக்கு இங்கு சௌகரியமே தவிர, மனித உற்பத்தித் தொழிலுக்குச் சௌகரிய மில்லை. நிலப்பரப்பில் எட்டில் ஒரு பாகங் கூட, பெருமை வாய்ந்த ஸ்தீரி புருஷர்களை உற்பத்தி செய்யக் கூடிய விதமான மண்ணையும் சீதோஷ்ணத்தையும் கொண்டதாயிருக்க வில்லை. வட கடலிலுள்ள பனப் பிரதேசத்தில் கோதுமை முதலிய தானியங்களை விளைவிக்க முடியாதது போல் பக்குவமான மண்ணும் சீதோஷ்ணமும் இருந்தாலொழிய சிறந்த அறிஞர்களை நீங்கள் உற்பத்தி செய்ய முடியாது. நிலைமையும் சுற்றுப்புறமும் சரியானதா யமைய வேண்டும். மனிதன் ஓர் உற்பத்திப் பொருள். அந்தப் பொருள் விளைய, சரியான மண்ணும் உரமும் வேண்டும். தைரியமாகவும் தீவிரமாகவும் மனிதன் போராடுவானாகில், இயற்கைச் சக்திகளி னால் ஏற்படக் கூடிய தடைகளை அவன் சமாளித்து விடக்கூடும். அறிவு நிரம்பிய ஸ்தீரி புருஷர்கள் பிறக்கக் கூடிய இடம் இந்த உலகத்திலே ஒரு சிறு பாகந்தான். பூமியின் தெற்குப் பாகத்தில், மனிதனுக்குத் தேவையான சீதோஷ்ணம் இருக்கிறது. ஆனால் இதன் பெரும் பாகம் சமுத்திரத்தில் போய் படிகிறது. இதன் விளைவு என்னவென்றால், பூமியின் தெற்குப் பாகத்தில் பேரறிஞர்கள் யாரும் தோன்றவே யில்லை. பூமியின் வட கோடியில் பெரிய அறிஞர்கள் கிடையாது. ஏனென்றால் அங்கு அதிகமான குளிர். அப்படியே தென் கோடியிலும் அறிஞர்கள் இல்லை. ஏனென்றால் அங்கு அதிக மான உஷ்ணம். எனவே, அறிஞர்கள் உற்பத்தியாக வேண்டுமானால் குளிர்காலமும் தேவை; கோடை காலமும் தேவை. எந்த தேசத்தில், மனிதனுக்குப் போர்வை தேவையில்லாமல் இருக்கிறதோ, எங்கு மேகங்கள் சூரியனை மறைத்துக் கொண்டிருக்கின்றனவோ, அங்கு மனிதனுடையஸ்வாபாவிகமான தொழில் புரட்சிதான். கைத் தொழிலுக்கும் அறிவுக்கும் தாயாயிருப்பது எது? குளிர் காலந்தான். அப்படியே குடும்ப சம்பந்தத்திற்கும் இந்தக் குளிர் காலந்தான் தாயாயிருக் கிறது. குளிர் காலமானது, குளிர்ச்சி பொருந்திய தன் கைகளுக்குள்ளே புருஷனையும் மனைவியையும், இனிமையான குழந்தைகளையும் ஒன்று சேர்த்து அணைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பூலோகத்திலேயே நாம் மோட்சலோகத்தைக் காணவேண்டு மானால் அஃது எங்கே கிடைக்கும்? குளிர் காலத்து இரவு ஒன்றில் ஒரு வீட்டினுள் நுழைந்து பாருங்கள். ஜன்னல்கள் திறந்திருக்க, கணப்புச் சட்டியைச் சுற்றிக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்திருப்பார்கள்; கிழவி ஒருத்தி தையல் தைத்துக் கொண் டிருப்பாள்; பூனை யென்று விளையாடிக் கொண்டிருக்கும்; குழந்தைகள், ‘எனக்கு இந்தப் பொம்மை; உனக்கு அந்தப் பொம்மை’ என்று சொல்லி விளையாடிக் கொண்டிருக்கும்; தகப்பனாரோ, படித்துக் கொண்டும் சுருட்டுப் பிடித்துக் கொண்டும் இருப்பார்; அவருடைய வாயிலிருந்து வரும் புகையானது, குடும்ப சந்தோஷம் என்கிற பீடத்திலிருந்து உண்டாகிற தூபம் போலிருக்கும். இந்த மாதிரியான ஒரு வீட்டை நான் பார்க்கிற போது, ஆசீர்வதிக்கப் பட்டவனாகவே என்னைக் கருதிக் கொள்கிறேன்.
நாகரிகம், சுதந்திரம், நீதி, தருமம், அறிவு அபிவிருத்தி முதலியன வெல்லாம், மிதந்து செல்கிற பனிக் கட்டியிலிருந்து மலர்ந்த மலர்கள்.
செழுமை நிறைந்த கணவாய்ப் பிரதேசங்களிலும், மலைப் பிராந்தியங்களிலும் செடி கொடிகள் எப்படி உற்பத்தியாகின்றன வென்பதைப் பாருங்கள். கணவாய்ப் பிரதேசங்களிலும், உயர்ந்தன வும் கனிதருவனவுமான விருட்சங்கள் உண்டாகின்றன. ஆனால் உயர, உயர மலைச் சிகரங்களில் புதர்கள் தான் காணப்படுகின்றன. இவை என்ன காட்டுகின்றன? சரியான மண்ணும் சீதோஷ்ணமும் தேவை யென்பதைக் காட்டுகின்றன. இப்படியே, அறிஞர்கள் உற்பத்தியாவதற்குச் சரியான மண்ணும் சீதோஷ்ணமும் தேவை.
சில வருஷங்களுக்கு முன்னால் அமெரிக்காவுடன், ஸாண்டோ டாமிங்கோ1 பிரதேசத்தைச் சேர்த்து விடுவதைப் பற்றிப் பேச்சு வார்தைகள் நடைபெற்றன. அப்பொழுது நான் வாஷிங்க்டன்2 நகரத்தில் இருந்தேன். ஸாண்டோ டாமிங்கோ, அமெரிக்காவுடன் சேர்க்கப்படுவதை நான் ஆட்சேபித்தேன். அந்த ஸாண்டோ டாமிங்கோ சௌகரியமான சீதோஷ்ண ஸ்திதியுடைய தென்றும், அங்கு எல்லாப் பொருள்களும் விளையு மென்றும் நான் கேள்விப் பட்டிருந்தேன். அதனால் தான், அந்தப் பிரதேச ஆக்ரமிப்பை நான் ஆட்சேபித்தேன். ‘அந்தப் பிரதேசம் நமக்கு வேண்டாம். அங்குத் திறமை வாய்ந்தஅமெரிக்கப் பிரஜைகளை உற்பத்தி செய்ய முடியாது. அங்குள்ள சீதோஷ்ணம் நம்மைக் கெடுத்துவிடும். வேண்டு மானால் ஐயாயிரம் பாதிரிமார்களையும், ஐயாயிரம் முதலாளிகளையும், ஐயாயிரம் கல்லூரி போதகாசிரியர்களையும், ஐயாயிரம் பலசாலி களையும் அங்கு அனுப்பிப் பாருங்கள். அவர் களுடைய இரண்டாவது தலைமுறையினர், வெறுங் காலுடன் கோவேறு கழுதைகளின் மீது ஏறிக் கொண்டு, ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கோழிச் சண்டையைப் பார்க்கச் செல்வார்கள்’ என்று நான் கூறினேன். ஒரு தேசத்தின் சீதோஷ்ண ஸ்திதியானது, மனிதனை மாற்றிவிடும் சக்தியுடையது.
ஆனால் விஞ்ஞான அறிவு வளர்ந்து கொண்டு வருகிறது. இதனால் அறிஞர்கள் உண்டாகும் இடமும் விசாலிக்கப்பட்டு வருகிறது. வடதுருவப் பிரதேசத்தில் வீடுகள் கட்டிக் கொள்ளலாம்; சாதாரண உடைஉடுத்திக் கொள்ளலாம்; நல்ல ஆகாரம் சாப்பிடலாம்; அடுப்பு எரிப்பதற்குத் தேவையான பொருள்களும் கிடைக்கின்றன. இங்ஙனமே தெற்குப் பிரதேசத்தின் உஷ்ணத்தையும் நாம் சமாளித்துக் கொண்டு வருகிறோம். மறு உலகத்தை விட இந்த உலகத்தின் மீது இன்னும் அதிகமான கவனஞ் செலுத்தத் தொடங்குவோமானால், காலா காலத்தில் நாம் இந்த உலகத்தில் பலஅறிஞர்களை உற்பத்தி செய்துகொண்டு போகலாம்.
மனிதன், மிருக ஜாதியிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந் தவன் என்பது என் நம்பிக்கை. இதுதான் உண்மை யென்று நான் சொல்ல வில்லை. இஃதுண்மை யென்று நான் நம்புவதாகவே சொல்கிறேன். இந்த விஷயத்தில் எட்டுக்கு ஏழு மடங்கு என் அபிப்பிராயம் சரியென்று நான் நம்புகிறேன். ஆரம்பத்தில் இந்தக் கொள்கை எனக்குச் சொல்லப்பட்டபோது, எனக்குப் பிடிக்கவே யில்லை. நமது மூதாதையர்களைப் பற்றிப் பெருமை கொள்ளக் கூடிய விஷய மொன்று மில்லையே யென்று நான் வருந்தினேன். ஆனால் இதைப் பற்றிப் பின்னர் சிந்தனை செய்து பார்த்ததில் இந்தக் கொள்கை சரியென்றே எனக்குப்பட்டது. எனவே, புராதன காலத்து மனிதர்களுடைய எலும்புகளைப் பற்றியும் தசை நார்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். அந்தப் புராதன காலத்து மனிதர்களின் செவிகளிலிருந்து கன்னம் வரையில் ஒரு வித நரம்பு ஓடிக் கொண்டிருந்ததென்பதைக் கண்டேன். நமது முன்னோர் களுக்கு, செவித் துவாரங்களை மூடிக்கொள்ளும்படி செவிகள் விரிந்து பரந்து இருந்தனவென்றும் அவை, நாளா வட்டத்தில் குறுகிப் போய் விட்டன வென்றும் தெரிந்து கொண்டேன். இப்பொழுது, நமக்குக் காதுகள் பெரிதாக இல்லாமலிருப்பதே நல்லதென்று தோன்றுகிறது.
மூளையே யில்லாமல் வெறும் உருவமாகி, அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து கடைசியில் மனிதனாகி, அந்த மனிதரிலே ஷேக்ஸ்பியர் போன்ற மேதாவிகளை உற்பத்தி செய்து கொடுத்தது எந்த வமிசவழியோ அந்த வமிசவழியைச் சேர்ந்தவன் நான் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமை ஏற்படுகிறது. கடவுள், எல்லாம் நிறைந்த எந்த தம்பதிகள் மீது தன்னுடைய பணத்தை யெல்லாம் தோற்று விட்டாரோ, அந்தத் தம்பதிகளின் வமிசத்தைச் சேர்ந்தவன் என்று என்னைச் சொல்லிக் கொள்வதை விட, படிப்படியாக நம்பிக்கையிலேயே வளர்ச்சி யடைந்த மானிட வமிசத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதிலேயே நான் பெருமை யடைகிறேன்.
முடிவுரை
என் மனதிலெழுந்த எண்ணங்களை உங்களுக்குத் தெரிவித் திருக்கிறேன். சிந்தனை செய்யாமல் நம்புவதை விட, ஆராய்ச்சி செய்வது நல்லதல்லவா? அச்சத்தைவிட அறிவு தகுந்த வழி காட்டியல்லவா? இந்த உலகம் உயிருள்ளவர்களால் நடத்தப்பட வேண்டுமே தவிர, இறந்து போனவர்களால் நடத்தப் படக் கூடாது. சவக்குழி, சிங்காதனமாகாது. பிணம், அரசனாகாது. மனிதன், வெறும் சாம்பல் மீது வாழ்க்கையை நடத்தக்கூடாது.
இப்பொழுது உயிரோடுள்ள தத்துவஞானிகளைக் காட்டி லும், இறந்து போன தத்துவ ஞானிகளுக்கு அதிகம் ஒன்றும் தெரிந்திருக்க முடியாது. இதைவிட அதிகமாக ஒன்றுஞ் சொல்வதற் கில்லை. இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்திருப்பதே சொற்பந்தான்; அடுத்த உலகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது.
நமது தந்தையர், அறிவுள்ள அடிமைகளாயிருந்தார்கள். அவர் களுடைய தகப்பன்மார்கள் வெறும் அடிமைகளாயிருந் தார்கள். நாம் எந்தக் கொள்கைகளை இப்பொழுது அநுஷ்டிக்கி றோமோ அந்தக் கொள்கை களைச் சிருஷ்டித்தவர்கள், அறிவில்லாத வர்கள்; மிருகத்தன்மை வாய்ந்தவர்கள். இப்பொழுது நாம் அநுஷ்டிக்கிற ஒவ்வொரு கொள்கையின்மீதும் சாட்டையின் அடையாளம் இருக்கிறது; இருப்பு விலங்கின் துரு ஏறியிருக்கிறது; தொழுக்கட்டையின் சாம்பல் படிந்துகிடக்கிறது.
மூட நம்பிக்கை யிருக்கிறதே, அஃது அடிமைத் தனத்தின் குழந்தை. சுயமாகச் சிந்தனை செய்தால் தான் நமக்கு உண்மை புலப்படும். எல்லோரும், சுயமாக எண்ணவும், எண்ணியதை வெளியிலே சொல்லவும் உரிமை பெற்று விடுவார்களேயானால் ஒவ்வொருவருடைய மூளையி லிருந்தும் சிறந்த கருத்துக்கள் தாமே வெளியாகும். அப்பொழுது உலகத்தில் ஞான பொக்கிஷம் நிரம்பியிருக்கும்.
ஆண்களும் பெண்களும் தெய்வத் திருச்சபைக்குப் பயப்படு கிறவரை, புரோகிதன் பயத்தை உண்டு பண்ணுகிறவரை, ஒரு விஷயம் புரியவில்லை யென்பதற்காக ஜனங்கள் அதனை வணங்கிக் கொண்டிருக் கிற வரை, தங்களுடைய சுயமரியாதையை இழந்து நிற்பதுதான் மரியாதை என்று ஜனங்கள் நினைத்துக் கொண்டிருக் கிறவரை, தெய்வத் திருச்சபைக்கு ஆதிக்கம் இருக்கிறவரை, மானிட ஜாதி வெறும் புஸ்தக மொன்றைத் தொழுது கொண்டிருக்கிறவரை, உலகத்தில் ஞான சூனியர் களும், நாடோடிகளும், மூட நம்பிக்கை என்ற கந்தைகளை உடுத்திக் கொண்டு உலவி வருவார்கள்.
விவிலிய நூல் ஒன்றுதான், தனது உரிமைகளை வரையறுத்துக் கொடுக்கும் சாஸனம் என்று ஸ்திரீகள் நினைத்துக் கொண்டிருக்கிற வரை, அவர்கள் புருஷர்களின் அடிமைகளாகத்தான் இருப்பார்கள். அந்த விவிலிய நூல், ஒரு ஸ்திரீயினால் எழுதப்படவில்லை. அத னுடைய ஏட்டிலே, அவள் அவமானமடையக் கூடிய விஷயங்கள் தானிருக்கின்றன. மனிதனுடைய சொத்தாகவே ஸ்திரீ அதில் கருதப்பட்டிருக்கிறாள். தாயாக இருக்கும் குற்றத்திற்காக அவள் மன்னிப்புக் கேட்கும்படி கூறப்படுகிறாள். கிறிஸ்து நாதருக்கு எப்படி தன் புருஷன் கீழ்ப்படிந்தவரோ அப்படியே தானும் தன் புருஷனுக்குக் கீழ்ப்படிந்தவள் என்று அவள் எண்ணுகிறாள். அவள் பேசவும் அநுமதிக்கப்படுவதில்லை. அவளுடைய அழுக்கப் படிந்த நாவிலிருந்து வேதம் வெளிவரக்கூடாது. அவள், மௌனத்திலே தான் கற்கவேண்டியதை யெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பைபிளிலே, நாகரிகம் வாய்ந்த ஒரு குடும்பத்தின் வருணனையைப் பார்க்க முடியாது. சுதந்திரமுள்ள ஒரு தாய், அவளைச் சுற்றிச் சுதந்திரமாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், அவளோடு சுதந்திரமாகப் பேசிக் கொண்டிருக்கும் கணவன் இவையெல்லாம், பைபிளை எழுதினவர் களுக்குத் தெரியாது. குடும்பத்தின் ஜனநாயத்திலே, அடுப்பங்கரையின் குடியரசு வாழ்க்கையிலே அவர்களுக்கு நம்பிக்கை யில்லை. இந்தப் பெரிய மனிதர்களுக்கு, குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இவர்கள் பலாத்காரத்தை ஆதரிக்கிறவர்க ளாகவும், சாட்டையின் சிஷ்யர் களாகவும் இருந்தார்கள். இப்படிப் பட்டவர்களின் கொள்கைகள், கோடிக் கணக்கான குடும்பங்களை மிருகத்தன்மையாக்கிவிட்டன; குழந்தைகளின் கண்களிலே கண்ணீரை நிரப்பிவிட்டன.
சுதந்திர ஸ்திரீ புருஷர்கள் நிறைந்த ஒரு தலைமுறை இந்த உலகத்திலே இருந்ததே கிடையாது. ஒரு கொள்கையை நிர்ணயித்து எழுத இன்னும் காலம் வரவில்லை. விலங்குகள் உடைபடுகிற வரையில், குகை களைக் கோயில்களாகக் கருதாத வரையில் காத்திருங்கள். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு மௌனமா யிருப்பதுதான் ஞானத்தின் அறிகுறியென்று கருதப்படுகிற வரை, கோழைத்தனம் பக்தி யென்று எண்ணப்படுகிற வரை காத்திருங்கள். இறந்து போனவர்களுக்குச் சமமாக உயிருள்ளவர்கள் கருதப்படுகிற வரை, சவப் பெட்டியைவிட, தொட்டிலுக்கு முதல் ஸ்தானம் கொடுக்கப்படுகிற வரை பொறுத்திருங்கள். மற்றவர்கள் என்ன நம்புகிறார்கள் என்பதைக் கவனியாமல் நமக்குத் தெரிந்ததை நாம் சொல்கிற உரிமை நமக்குக் கிடைக்கிற வரையில் பொறுத்திருங்கள். உபதேசங்களுடைய ஸ்தானத்தில் ஆசிரியர்கள் அமர்கிற வரையில், பின்பற்றுவோரெல்லாரும் ஆராய்ச்சியாளர்களாக மாறுகிறவரை பொறுத்திருங்கள். உலகம் சுதந்திரமடைந்த பிறகு நீங்கள் உங்கள் கொள்கையை வரையறுக்கலாம். அது வரையில் பொறுத் திருங்கள்.
இந்தக் கொள்கையில் ஒரே ஒரு வார்த்தைதான் இருக்கும் அஃதென்ன? அதுதான் சுதந்திரம்.
ஓ! சுதந்திரமே! எட்டி யிருக்கும் ஆகாயத்தில் மிதந்து கொண்டிராதே. ஓர் உற்சாகியினுடைய, கொடையாளியினுடைய, கவிஞனுடைய கனவிலே வாழ்ந்து கொண்டிராதே. கீழே இறங்கி வந்து, மனிதர்களுடைய குழந்தைகளின் மத்தியில் உன் இருப் பிடத்தை ஏற்படுத்திக் கொண்டு வாசஞ்செய்.
உலக அறிஞர்களின் மூளையிலிருந்து என்னென்ன புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்படுமோ, என்னென்ன எண்ணங்கள் உதிக்குமோ எனக்குத் தெரியாது. வருங்காலத்தில் என்னென்ன புகழ் ஆடைகள் நெய்யப்படுமோ எனக்குத் தெரியாது. எண்ணம் என்கிற மைதானத்திலே என்னென்ன வெற்றிகள் காணப்படுமென்பது என்னால் கனவு கூடக் காணமுடியாது. ஆனால் ஒன்றும் மட்டும் எனக்கு நிச்சய மாகத் தெரியும். எதிர்காலமென்னும் எல்லையற்ற சமுத்திரத்திலிருந்து, ஆண், பெண், குழந்தை ஆகியோர் அடங்கிய மானிட ஜாதியின் சுதந்திரம் என்ற நன்கொடையை விடச் சிறந்தது. ஆசீர்வாதத்தை விட அருமை யானது வேறொன்று வந்து நிகழ் காலமென்னும் கரையைத் தொடாது.